top of page
Search

அஃகி யகன்ற அறிவென்னாம் ... 175

09/11/2023 (978)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான், ஐயோவென்று போவான்! --- புதிய கோணாங்கி, மகாகவி பாரதி

வெஃகுதல் இரு வழிகளிலும் நடக்கலாம். தம்மிடம் இல்லையே என்று அடித்தும் பிடுங்கலாம். கற்றவனும், இருப்பவனும் தம்மை இவன் என்ன செய்ய முடியும் என்று மற்றவனைக் கசக்கியும் பிடுங்கலாம். இரண்டுமே மிகப் பெரிய அறப் பிழைகள்தாம் என்கிறார்.


உன் அறிவை மற்றவர்களிடமிருந்து அடித்துப் பிடுங்க, கசக்கிப் பிழியத்தான் பயன்படுத்தப் போகிறேன் என்றால் நீ என்ன ஆழங்கால்பட்டுப் படித்து என்ன பயன்? என்று கேட்கிறார்.


அஃக என்றால் சுருங்க, நுண்மையாக என்று பொருள். “அஃகியகன்ற அறிவு” என்றால் நுண்மையாக நோக்கிப் பெற்ற அகன்ற அறிவு என்று பொருள்.

வெறி (frenzy) என்றால் நமக்குத் தெரியும் மித மிஞ்சிய ஆர்வம், கோபம் என்று பொருள்.


“வெஃகி வெறிய செயின்” என்றால் பிறர் பொருள்மீது பேராசைக் கொண்டு அதற்காக அற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மித மிஞ்சியச் செயல்களைச் செய்வது.


அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின். --- குறள் 175; அதிகாரம் – வெஃகாமை


வெஃகி யார் மாட்டும் வெறிய செயின் = பிறர் பொருளை விரும்பி எந்தவித வேறுபாடுமின்றி எல்லாரிடத்திலும் அற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மித மிஞ்சியத் தீயச் செயல்களைச் செய்யும்போது; அஃகியகன்ற அறிவு என்னாம் = நுண்மையாக நோக்கித் தாம் பெற்ற அகன்ற அறிவின் பயன்தான் என்ன?


பிறர் பொருளை விரும்பி எந்தவித வேறுபாடுமின்றி எல்லாரிடத்திலும் அற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மித மிஞ்சியத் தீயச் செயல்களைச் செய்யும்போது நுண்மையாக நோக்கித் தாம் பெற்ற அகன்ற அறிவின் பயன்தான் என்ன?


White collar crimes என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அவற்றைச் செய்வது கூரிய அறிவுடையவர்கள்தாம். கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை சிறிதுமின்றி பிறர் பொருளை மொத்தமாகக் கவருகிறார்கள்.


உலக வரலாற்றில் அண்மையில் மிகப் பெரிய பொன்சி திட்டத்தை நடத்தியவர் பெர்னி மடோஃப் (Bernie Madoff). பொன்சி திட்டம் என்பது சார்லஸ் பொன்சி (Charles Ponzi) என்பவரின் பெயரால் அறியப்படுகிறது. 1940 களில் பொன்சி முறையை அறிமுகப்படுத்தியவர் இவர். பொன்சி முறை என்பது கற்பனைக்கு எட்டா வட்டியைத் தருவேன் என்பது. எப்படி என்று கேட்டால் என்னிடம் சிறப்புத் திட்டங்கள் இருக்கின்றன என்பார்கள். அதன் மூலம் பணத்தை முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்பார்கள். இதனால் கவரப்படுபவர்கள் பணத்தைக் கொட்ட அவர்களின் பணத்திலிருந்தே அவர்களுக்கு வட்டியைத் தருவது. முதல் (capital) குறையக் குறையப் புதுப்புது வாடிக்கையாளர்களைச் சேர்த்துக் கொள்வது. ஒரு சமயம் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட்டு தங்கள் பணத்தை மொத்தமாகத் திருப்பித் தருமாறு கேட்கும்போது இந்தத் திட்டத்தின் குட்டு வெளிப்பட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணம் பறி போனதை உணருகிறார்கள்.


Bernie Madoff என்பார் பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பொன்சி திட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்தியவர். 2008 இல் அமெரிக்க பங்குச் சந்தை அதல பாதாளத்திற்குச் சென்றபோது அவரால் சமாளிக்க முடியாமல் தன் தப்பை ஒப்புக் கொண்டு 150 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றார். அடுத்த சில ஆண்டுகளில், அவரின் இரு மகன்களில் ஒருவர் தூக்கிட்டுக் கொண்டார். மற்றவர் புற்று நோயால் மரணித்தார். பெர்னியும் சிறையிலேயே 2021 ஆம் ஆண்டு தனது 82 ஆம் வயதில் உயிர் நீத்தார்.


குறள் 171 இல் நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடி பொன்ற குற்றமும் ஆங்கேதரும் என்ற நம் பேராசானின் சொல் நிறை மொழி மாந்தர் சொல். பொய்காது! காண்க 06/11/2023.


அறிவுடையவர்கள்தாம் களவாடுகிறார்கள். இதனை நேரடியாகச் சொல்லாமல் கொஞ்சம் புனுகிட்டு அறிவினால் என்ன பயன் என்றார்.


மகாகவி பாரதியார் நேரடியாகப் படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோவென்று போவான் என்றார். இது நிற்க.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments


Post: Blog2_Post
bottom of page