22/08/2023 (900)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பகைமாட்சி அதிகாரத்தில் ஒரு தலைமை எவ்வாறெல்லாம் இருந்தால் பகைவர்கள் கொண்டாடுவார்கள் என்பதைப் பட்டியல் போட்டுக் கொண்டே போகிறார்.
குறள் 862 இல் அன்பிலன், ஆன்ற துணையிலன், தான் துவ்வான் என்றவர் அடுத்து வரும் குறளில் அஞ்சும், அறியான், அமைவிலன், ஈகலான் என்கிறார்.
அஞ்சும் = அஞ்சவேண்டாதனவற்றிற்கு அஞ்சியும்; அறியான் = அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்து கொள்ளாமலும், அமைவிலன் = தன் சுற்றம் நட்புடன் பொருந்தி இல்லாமலும்; ஈகலான் = யாருக்கும் ஒரு உதவி செய்யாமலும் இருப்பவனை யார்தாம் எளிதாக வெல்ல முடியாது என்கிறார்.
“அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.” --- குறள் 863; அதிகாரம் – பகைமாட்சி
தேவையில்லாதவனவற்றிற்கு அஞ்சுபவன், நல்ல அறிவைப் பெறாதாவன், உடன் இருப்பர்களுடன் நட்புடன் பொருந்தி இருக்காதவன், யாருக்கும் எந்த உதவிகளும் செய்யாமல் இருப்பவன், பகைவர்களிடம் எந்தவித சண்டையும் செய்யாமலே தாமே சரண் அடைந்துவிடும் மிக எளியனாக இருப்பான்.
மேற்சொன்ன நான்கு குணங்கள் இருப்பவன் பகை இல்லாமலும் அழிவான் என்று சொல்லாமல் சொல்கிறார். எனவே, ஒரு தலைமை இந்நான்கையும் தவிர்க்க வேண்டும்.
அடுத்த 864 ஆவது குறளில் மேலும் இரண்டு குற்றங்களைக் கூறுகிறார். வெகுளி நீங்கான், நிறை இலன் என்கிறார்.
வெகுளி என்றால் சினம், கோபம். வெகுளி நீங்கான் என்றால் எப்போதும் கடு கடுவென இருப்பது.
உளவியலாளர்கள் சொல்வது என்னவென்றால் ஒருவன் எப்போதும் கோபப்படுகிறானா அவனின் ஆழ் மனத்தில் பயம் மிகுதியாக இருக்கிறது என்று பொருளாம். பயம் அதிகமானால் கோபம் வருமாம்! இது நிற்க.
“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” என்று சொல்கிறது கலித்தொகை.
கலித்தொகை என்னும் தொகை நூல் எட்டுத் தொகையில் ஒரு நூல், எட்டுத்தொகை என்பது பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்று. கணக்கு என்றால் நூல். மேற்கணக்கு என்றால் நீண்ட பாடல்கள் கொண்ட நூல். அஃதாவது பாடலின் அடி எல்லைகள் அதிகமாக இருக்கும். 11 அடியிலிருந்து 80 அடிகள் வரை அமைந்தப் பாடல்கள் கலித்தொகையில் உள்ளன.
இந்தத் தொகை நூலில் மொத்தம் 150 பாடல்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளுக்கும் ஐந்து புலவர்கள் பாடி வைத்துள்ளனர்.
கலித்தொகையை 'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பிக்கிறார்கள்.
இதிலே நெய்தல் கலி பாடியவர் நல்லுந்துவனார் என்னும் பெருமகனார். இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 33. அஃதாவது, 118 முதல் 150 வரை உள்ள பாடல்கள்.
பழமொழிகள் போன்று, ஒன்பது அறக் கருத்துகளை வரிக்கு ஒன்றாக நவமணிகளாக கோர்த்துள்ளார் நல்லுந்துவனார் பெருமான்.
'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்... பாடல் 133; கலித்தொகை.
ஆற்றுதல் என்பது இயலாதவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது ஒட்டி இருப்பவரை பிரியாமல் இருத்தல்;
பண்பு என்பது பெருமைத் தரத்தக்கது எது என அறிந்து அதன்படி நடத்தல்;
அன்பு என்பது உறவுகளை விட்டு விலகாமை;
அறிவு என்பது அறியாதவர் சொல்லும் சொற்களைப் பொறுத்தல்;
செறிவு என்பது சொன்ன சொல் பிறழாமை;
நிறை என்பது மறைக்க வேண்டியவற்றை மறைத்தல்;
முறை என்பது குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் நீதி வழங்கல்;
பொறை என்பது தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைப் பொறுத்தல் ...
நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires