26/07/2022 (515)
நல்ல குடியில் பிறந்தவன் இல்லையா? நீ இப்படி பண்ணலாமா?ன்னு கேட்டா அவனைத் தட்டிக் கொடுத்து தட்டிக் கேட்கிறார்கள் என்று பொருள்.
உங்க ஆளுங்க எல்லாம் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? அவர்கள் எல்லாம் சூரர்கள், வீரர்கள். நீயும் அதுபோலவோ, இல்லை அவர்களைவிட மேம்பட்டோ வரனும் என்பதற்குத்தான் குடிப்பெருமை. நற்பண்புகளை விதைப்பதற்கு பயன்படவேண்டும் குடிப்பெருமை.
அந்த வகையிலேதான் இந்த குடிமை அதிகாரம் அமைந்திருக்கிறது.
“அவன் கிட்ட நீ கட்டு , கட்டாக அடுக்கி கோடி ரூபாய் கொடுத்தாலும், ஒரு காலத்திலும், ஒழுக்கக் கேடான எதையும் செய்யமாட்டான். அவன் வந்த வழி அது.” என்று பேசுவதைக் கேட்டிருப்போம். இதையே, நம் பேராசான் ஒரு குறளாக போட்டுள்ளார்.
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.” --- குறள் 954; அதிகாரம் – குடிமை
குடிப்பிறந்தார் = நல்ல குடியில், வழியில் வருபவர்கள்; அடுக்கிய கோடி பெறினும் =எவ்வளவுதான் கோடி, கோடியாக கொடுத்தாலும்; குன்றுவ செய்தல் இலர் = கீழான, ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்யமாட்டார்கள்.
நம்மாளு: ஐயா, அவங்கிட்ட ஏற்கனவே கோடி, கோடியா இருக்கும். அதான், மசியறதில்லை. இது எப்படி பெருமையாகும்?
ஆசிரியர்: அப்படியில்லை தம்பி, நல்ல வழியிலே, குடியிலே இருக்கனும் என்று நினைப்பவர்கள், இருந்தாலும், இல்லை என்றாலும் ஒரே மாதிரிதான் நடப்பார்கள். உங்களைமாதிரி யாராவது கேட்பார்கள் என்று தெரிந்துதான் நம்ம ஐயன் அடுத்தக் குறளைப் போட்டுள்ளார்.
“வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று.” --- குறள் 955; அதிகாரம் - குடிமை
பழங்குடி = நல்லவழியில் வருபவர்கள், உயர்ந்த பண்புகளைக் கொண்ட குடியிலே தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள்; வழங்குவது = கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது; உள்வீழ்ந்தக் கண்ணும் = அவர்களுக்கு தன்னிடம் உள்ள பொருள் குறைந்து கொண்டே இருப்பது தெரிந்தே இருந்தாலும், ஏழ்மைக்குத் தள்ளப்பட்டாலும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று = அவர்கள் நற்பண்புகளிலிருந்து விலகுவது இல்லை.
நல்லவழியில் வருபவர்கள், ஏழ்மைக்குத் தள்ளப்பட்டாலும். அவர்கள் நற்பண்புகளிலிருந்து விலகுவது இல்லை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
コメント