அடுப்ப வரும் பழி ... கம்பராமாயணம்
Updated: Mar 9
08/03/2023 (734)
கொள்வது தீது; கொடுப்பது நன்று என்றார் மாவலி. ஈந்தவர் அல்லால் இவ்வுலகில் நிலைத்தவர்கள் யார்? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
“ஈவது விலக்கேல்” என்றார் ஆத்திசூடியில், நம் ஔவை பெருந்தகை. கொடுப்பதைத் தடுப்பது கொடியது. சிலருக்கு அவ்வழக்கம் இருக்கலாம். கொடுக்க நினைப்பவர்களை விழுந்து தடுப்பது!
அது தவறு என்று ஆன்றோர்களால் சொல்லப்படுகிறது. தடுப்பதற்கு பல காரணங்களும் இருக்கலாம். ஏமாளியாக இருக்காதே! என்பதுதான் அவர்களின் முதல் காரணம்!
கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்ன கதையை நினைவு படுத்துங்கள். மீள்பார்வைக்காக காண்க 03/12/2021 (283).
மாட்டுக்கு நாம புல்லுக்கட்டை (அதாங்க அதன் உணவை) அதன் வாய்கிட்டதான் கொடுக்கிறோம். ஆனால், அது பாலை தன் மடியிலிருந்து கறக்கிறது. வாய் வழியாகத்தான் உதவி செய்தோம், அதனால் அதுவும் வாய் வழியாகவே பால் தர வேண்டும் என்று நினைப்பதில்லை.
நாம கொடுப்பது ஒரு இடம்; பெறுவது ஒரு இடம். நாம் எதுவும் செய்யாமலே நமக்கு பலர் உதவுவதை பெற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றிர்க்கும் ஒரு கணக்கு இருக்கு.
இது நிற்க.
குறிகளால் காட்டுபவர் நம் கம்பபெருமான். தமிழ் சாதி அழியாமல் இருக்க கம்பபெருமானும் ஒரு காரணம் என்கிறார் மகாகவி பாரதி. அதை பின்னொருநாள் பார்ப்போம் என்றார் ஆசிரியர்.
நம்மை அழிக்க நினைப்பவர்கள் பகைவர்களும் அல்லர். என்னை யார் பகைவர் என்று கேட்பீர்களானால், ஆச்சாரியாரே, கொடேல் என நின்று தடுப்பவரே பகைவர். மேலும் ஒன்று பணிவோடு சொல்கிறேன்: அவ்வாறு தடுப்பது தடுப்பவரையும் கெடுக்கும். அது போன்ற ஒரு கேடு தடுப்பவர்களுக்கு இல்லை. அதாவது, தடுப்பது பெருங்கேடு என்கிறார் மாவலி.
“அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று
தடுப்பவரே பகை தம்மையும் அன்னார்
கெடுப்பவர் அன்னது ஒர் கேடு இலை.” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 21
கொடுப்பது மட்டுமல்ல! ஒருவரை சிலர் புகழ்வதைக்கூட சிலர் பொறுக்க மாட்டார்கள். புகழ்பவர்களை நோக்கி அவ்வாறு புகழாதே என்பார்கள். அவர்களுக்குத் தலைக்கணம் ஏறிவிடும் என்ற ஒரு காரணத்தையும் கற்பிப்பார்கள்! அவர்களும் மனம் திறந்து பாராட்ட மாட்டார்கள், மற்றவர்கள் பாராட்டினாலும் சகிக்க மாட்டார்கள். இது கொடுப்பதைத் தடுப்பதைவிட பெரும்கேடு. இது குறித்து பின்னர் விரிப்போம் என்றார் ஆசிரியர்.
அதுவரை, அனைவரையும் மனம் திறந்து பாராட்டுங்கள்.
மேலும் தொடருவோம். மடி ஆண்மையை மாற்றுவதை மட்டும் மறந்துடாதீங்க! அதாங்க, சோம்பலைத் தவிர்பது!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
