19/09/2022 (568)
அவன், அந்தக் குளத்தின் அருகில் தன் கற்பனை சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கிறான்.
அவனுக்கு திடிரென்று ஒரு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. வியர்த்தும் கொட்டுகிறது.
நேற்று பார்த்த ஒரு அனிச்சமலரைக் காணவில்லை. அதுவும் காம்போடு பறிக்கப் பட்டுள்ளது.
ஐயகோ, நேற்று என்னவள் வந்தாளே, இந்த அனிச்சத்தை காம்போடு சூடிக் கொண்டிருப்பாளோ என்ற பயம் அவனைத் தாக்கியது.
உடனே, அவளைக் காண ஓடுகிறான். ஏதாவது ‘பறை’ ஒலி கேட்கிறதா என்று காதினைத் தீட்டிக் கொண்டு ஓடுகிறான். அவ்வாறு ஒன்றுமில்லை.
அதோ அவள். தலையில் நல்ல வேளையாக அந்த அனிச்ச மலர் இல்லை. தன் தோழியருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.
அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சுவிடுகிறான்.
ஏன் அனிச்சத்தை சுடிக்கொள்ளக் கூடாதா என்பதுதானே உங்கள் கேள்வி?
அவனைப் பொறுத்தவரை ‘ஆமாம்’ என்பதுதான் பதில்!
அதற்கு அவன் சொல்லும் காரணம் இருக்கிறதே அதுதான் அழகின் உச்சம்.
அந்தக் காரனத்தைக் கேட்பதற்கு முன் பறைகளைப் பற்றி பார்ப்போம்.
‘பறை’ என்று ஒரு தோல் இசைக் கருவி நம் தமிழகத்தில் பண்டைக் காலத்திலிருந்து இருக்கின்றது. பறைகள் பல விதம். அரிப்பறை – அரித்தெழும் ஓசையை எழுப்ப, கோட்டுப் பறை – செய்திகளைத் தெரிவிக்க, உவகைப் பறை – மகிழ்ச்சியைத் தெரிவிக்க, சாப்பறை – இறப்பினைத் தெரிவிக்க … இப்படி பல பறைகள் நம் பண்டை தமிழ் நிலத்தில்.
பறை என்றால் சொல்லுதல் என்று பொருள். அதுவே, அந்த இசைக் கருவிக்கு பெயராக அமைந்துவிட்டது.
சரி, நாம் அவனின் காரணத்திற்கு வருவோம்.
என்னவளோ முறி இடையாள். அஃதாவது, அவளோ ஒடிந்து விடும் இடையைக் கொண்ட மெல்லிடையாள்.
அவள் அந்த அனிச்ச மலரை காம்பினைக் கிள்ளாமல் சூடிக் கொண்டால், ஒரு வேளை அந்த பாரம் தாங்காமல் அவள் இடை முறிந்து, அதனால் அவளுக்கு ஒன்று ஆகி, நல்ல பறை இசை முழங்காமல் போகுமோ என்று அவனின் மனம் தத்தளிக்கிறதாம். (சாப்பறை ஒலிக்குமோ என்பது உட்பொருள்)
அனிச்சமே மிக மெல்லிய மலர். அதனைக் காம்புடன் அணிந்து கொள்ள இடைமுறியும் என்பது கற்பனையின் உச்சம். அதாவது, இது போன்ற காட்சிப் பிழைகள் அன்பு மிக்கவர்களுக்குள் உண்டு.
இவ்வாறு சிந்தனை பிறழ்வதற்கு உதாரணம் வேண்டுமா? பாசமிகு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று, ஒவ்வொரு கணமும், சின்ன சின்ன நிகழ்வுகளுக்கெல்லாம் வருந்துவதில்லையா? அதைப்போல. அதுதான் அன்பின் உச்சம்.
சரி, நாம் அந்தக் குறளைப் பார்ப்போம்.
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.” --- குறள் 1115; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
பெய்தாள் = சூடிக் கொண்டாள்; நுசுப்பு = இடை;
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் = அனிச்சப் பூவின் காம்பினைக் கிள்ளாமல் சூடிக்கொண்டாளோ?
நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை = அதனால், அவள் இடைக்கு ஓன்றுஆகி நல்ல பறை இசை முழங்காது போகுமோ?
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்

Comments