24/09/2022 (573)
(அவனின் கற்பனைகளை அருகிருந்து கேட்டுக் கொண்டிருந்த தோழி ஒருத்தி, சொல்கிறாள்.)
தோழி: நமது தமிழ் இலக்கியங்கள் “உடன்போக்கு” என்பதை ஆதரிப்பது தெரியாதா உனக்கு. தினமும் இந்தக் குளக்கரையில் உட்கார்ந்துக் கொண்டு கற்பனையில் வாழ்க்கை நடத்துகிறாய். உனக்கு அப்படி ஒரு கொள்ளைக் காதல் என்றால் உன்னவளை இப்போதே உடன் அழைத்துக் கொண்டு செல்லவேண்டியதுதானே? ஏன் தயக்கம்?
அவன்: எனக்கும் தெரியும். இருப்பினும் …
தோழி: இருப்பினும் …? என்ன வேண்டும் உனக்கு? என்னால் அவளை, யாரும் அறியாமல் அந்தக் காட்டின் வழியாக அழைத்து வரமுடியும். அழைத்து வரட்டுமா?
அவன்: (பதறுகிறான்) அம்மா, தாயே அப்படியெல்லாம் செய்யாதுவிடாதே.
தோழி: என்ன ஆளுயா நீ? பார்ப்பதற்குதான் வீரனாகத் தெரிகிறாய் போலும்…
அவன்: உனக்கென்னத் தெரியும். எனக்குத்தான் அவளைப் பற்றி நன்கு தெரியும். அவள் தாங்கமாட்டாள்.
தோழி: என்னய்யா நீ? எதைத் தாங்கமாட்டாள்?
அவன்: அவள் பாதம் இருக்கிறதே அது மிகவும் மென்மையானது. அது எவ்வளவு மென்மையானது என்று சொல்கிறேன் கேள். மெல்லிய அனிச்ச மலர்களை உனக்குத் தெரியுமல்லவா அதை அவள் மிதித்தாலும் அவளின் பாதம் நோக வாய்ப்புண்டு!
தோழி: ம்ம்… அப்புறம்…
அவன்: மென்மையாக இருக்கும் அன்னத்தின் இறகுகளை அவள் மிதித்தாலும் அதுவே, முள் நிறைந்த நெருஞ்சியைப் போல அவளின் பாதத்தை பதம் பார்க்கும். நீ அந்தக் காட்டின் வழி அழைத்து வந்தால்… அம்மம்மா…
ஆதலால், தாயே நீ ஒன்றும் செய்யாதே. நானே பார்த்துக் கொள்கிறேன்.
“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.” --- குறள் 1120; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
மாதர் அடிக்கு அனிச்சமும் அன்னத்தின் தூவியும் = என்னவளின் பாதங்களுக்கு அனிச்ச மலரும், அன்னத்தின் இறகுகளும்;
நெருஞ்சிப் பழம் = நெருஞ்சி முள் (போல இருக்கும்)
நெருஞ்சி என்பது தரையில் படர்ந்து வளரும் ஒரு முள் நிறைந்தக் கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு அருமையான முலிகை என்று பரம்பரை வைத்தியர்கள் குறித்து வைத்துள்ளார்கள். இது ஒரு சிறுநீர் பெருக்கி, சிறுநீர் கற்களைக் கரைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு உதவும் என்றெல்லாம் குறித்துள்ளார்கள்.
நெருஞ்சிப் பழம் என்று ஒன்றும் இல்லை. அவன் ‘நெருஞ்சிப் பழம்’ என்று குறிப்பது கற்பனையின் உச்சம்.
அவள் இருக்கிறாளே அவள், ‘முள்’ என்ற வார்த்தையைக் கேட்டுவிட்டாலே, அவளின் மனம் புண்பட வாய்ப்புண்டாம்! அதனால் அவன் ‘பழம்’ என்ற சொல்லைப் போடுகிறானாம்.
நம்மாளு: நல்ல பழமா இருப்பான் போல!
வாழ்க நம் பேராசான்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments