அமரகத்து ஆற்றறுக்கும் ... 814, 798
07/01/2022 (316)
குறள்கள் 812, 813 ல் தன்னை மட்டும் யோசிக்கும் தீ நட்பைக் கூறினார், இது ஒரு வகை.
இன்னொரு வகையிருக்காம்! அதற்கும் இரண்டு குறள்கள் அமைத்துள்ளார். இது என்ன மாதிரியென்றால், தேவையானத் தருணத்தில் கைவிட்டு ஓடுதல். அவர்களோடு இருப்பதை விட தனியாக இருப்பதே மேல் என்கிறார்.
நட்பாராய்தல் அதிகாரத்தில் ஒரு குறிப்பு கொடுத்திருந்தார். மீள்பார்வைக்காக:
“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.” --- குறள் 798; அதிகாரம் – நட்பாராய்தல்
அல்லற்கண் ஆற்றறுப்பார் = துன்பம் வரும்போது ஒடி விடுபவர்கள்
சாதாரண சமயத்தில் நமக்குத் துணையாக, அனைத்தையும் கற்று அறிந்தவர்கள் போல, இருப்பவர்கள் ஒரு இக்கட்டான நிலை வரும் போது எனக்கு கொஞ்சம் வேலை இருக்குன்னு ஒதுங்கி ஓட்டம் பிடிப்பாங்க.
இது எப்படி இருக்கு என்றால், ஒரு குதிரையானது போருக்கு முன்வரை ரொம்ப மிடுக்கா அரசனை இங்கேயும் அங்கேயும் அழைத்துக் கொண்டு போகுமாம். ஆனால், போர் களத்திலேதான் தெரியுமாம் அதற்கு ஒன்றும் தெரியாது என்பது! அது மட்டுமில்லை. அது பயந்து தள்ளிவிட்டுட்டு ஓடிடுமாம். அதைப்போல நட்பிலும் சிலர் இருக்கலாம். அவர்களிடம் தொடர்பில் இருப்பதைவிட தனித்து இருப்பதே சிறப்பு என்கிறார்.
“அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.” --- குறள் 814; அதிகாரம் – தீ நட்பு
அமர் அகத்து = போர் களத்தில்; ஆற்றறுக்கும் = கை விடும்; கல்லா = தகுதிகள் ஏதும் இல்லா; மா = குதிரை; அன்னார் = போன்றவர்கள்; தமரின் = தொடர்பைவிட; தனிமை தலை = தனியாக இருப்பதே சிறப்பு
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
