top of page
Search

அமிழ்தினும் ஆற்ற இனிதே 61, 62, 63, 64

03/09/2023 (911)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

அறத்துப்பாலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில குறள்களை மட்டும் தொட்டுச் சென்றுள்ளோம். அதனைத் தொடரலாம் என்றார் ஆசிரியர்.


இல்லறவியலில் புதல்வரைப் பெறுதல் (7 ஆவது) அதிகாரத்திலிருந்து சில குறள்களைப் பார்த்துள்ளோம்.


குறள் 61 இல், இல்வாழ்வில் பெறுமவற்றுள் பெறுவது, அஃதாவது, ஆகச்சிறந்த பயன் என்ன என்று கேட்டால் அதுதான் நல்ல மக்களை உருவாக்குதல் என்றார். காண்க 28/08/2021 (186)


“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.” --- குறள் 61; அதிகாரம் – மக்கட் பேறு (புதல்வரைப் பெறுதல்)

பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கும் மக்களைப் பெற்றுவிட்டால் எழும் பிறப்புகளில் தீயவைகள் தீண்டா என்றார் குறள் 62 இல். காண்க 13/11/2021 (263).


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.” --- குறள் 62; அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்


தம் பொருள் என்பதே தம் மக்கள் தான் மக்களே! அவர்களுக்கு வாய்ப்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கவலையை விடுங்கள் என்கிறார் குறள் 63 இல். காண்க 07/03/2021 (49).


“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.” --- குறள் 63; அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்


குறள் 64 இல் தம்முடைய குழந்தைகள் தங்களின் சிறு கைகளைக் கொண்டு குழப்பிய கூழ், மிக இனிதினும் இனிது என்றார். காண்க 14/04/2021 (87).


“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.” --- குறள் 64; அதிகாரம்- புதல்வரைப் பெறுதல்

மக்கட் பேறு என்னும் அதிகாரத்தைதான் நாம் தற்காலத்தில் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியுள்ளோம். ஏன் எதற்காக அப்படி மாற்றப்பட்டது என்று தெரியவில்லை! அந்த அதிகாரத்தை அப்படியே உள்வாங்கி கண்ணம்மாவிற்கு பாடிவிட்டார்.

தம் மக்களைத் தொட்டுத் தூக்கி உச்சி முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி என்கிறார் மகாகவி பாரதி. சுருதியும் லயமும் நேர்த்தியாகக் கலந்த மிக அருமையானதொரு பாடல். அதனைப் பார்த்துவிட்டு நாம் தொடர்வோம் குறள்களை.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்


பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே


ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி

ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி


உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி


சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி

நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி


உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ


சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்

முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்


இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ

அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ


மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ

சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிரிதுமுண்டோ!

--- மகாகவி பாரதி


இதைப் போல் ஒரு பாடல் தமிழில் முன்புமில்லை, பின்புமில்லை என்று உணர்ந்து சொல்லியிருக்கிறார் தோழர் அமரர் ப. ஜீவானந்தம் அவர்கள்.


நாளைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.


15 views2 comments
Post: Blog2_Post
bottom of page