top of page
Search

அருங்கேடன் என்பதறிக ... 210

Writer's picture: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

23/11/2023 (992)

அன்பிற்கினியவர்களுக்கு:

குறள் 208 இல் நாம் இழைத்தத் தீயவை நம் காலடியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்றார். நம்மை நாமே விரும்பினால், எந்தவொரு தீயச் செயல்களையும் பிறர்க்குச் செய்ய நெருங்காதீர்கள் என்பதைக் குறள் 209 இல் சொன்னார். காண்க 16/11/2023. அடுத்து முடிவுரையாகச் சொல்லப் போகிறார்.

 

தம்பி இந்த உலகில் நூறு சதம் நல்லவர்களும் இல்லை; நூறு சதம் கெட்டவர்களும் இல்லை. ஆனால், நமக்கு ஆபத்தில்லாதவர்கள் யார் என்று கண்டறிய முடியும். அது எவ்வாறு எனில், ஒருவனின் செயல்களை நன்றாக கவனி. அவன் விலக்கி வைத்தத் தீய வழிகளில் சென்று பிறர்க்குத் தியவைகளைச் செய்யாமல் இருந்தால் அவனால் அவ்வளவாக ஆபத்தில்லை! அவனை நாம் அருங்கேடன் என்றும் சொல்லலாம். அருமை+கேடன் = அருங்கேடன் = கேடு மிகவும் குறைவானவன். அருமை இங்கே இன்மை பொருளில் வந்துள்ளது.

 

இந்தக் கருத்தில் இரு கூறுகள்: ஒன்று: விலக்கி வைத்த தீய வழியில் செல்பவன்; இரண்டு: சென்றாலும், பிறர்க்குத் தீயவைகளைச் செய்யாதவன்.

 

பலர்தாம் கெட்டாலும் பிறரைக் கெடுக்க மாட்டார்கள். நாம் அவர்களிடமிருந்து விலகிவிடலாம். ஆனால், சிலர் உடன் இருப்பவர்களையும் சேர்த்துக் கெடுப்பர். படு குழிக்குள் தள்ளுவர். இவர்கள்தாம் ஆபத்தானவர்கள். இவர்களிடம் இருந்து நாம் விலகுவது என்பது கடினம்.

 

நம்மாளு: நாம இரண்டு பேரும் செத்து செத்துப் பிழைப்போமா என்று ஒரு திரைப்படத்திலே வசனம் வருமே அது போல! நம்மை அந்த விளையாட்டிற்கு கூப்பிடுவார்கள். முதலில் நீ அந்தப் பள்ளத்தில் குதி. நான் உனக்குப் பின்னாடியே குதிப்பேன் என்பார்கள்! இவர்கள்தாம் மிகவும் ஆபத்தானவர்கள்.

 

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின். - 210; தீவினை அச்சம்

 

மருங்கோடித் தீவினை செய்யான் எனின் = தீயப் பாதையில் சென்று தீயச் செயல்களைச் செய்யாதவன் என்றால்; அருங்கேடன் என்பது அறிக = அவன், அவ்வளவாக ஆபத்தில்லாதவன் என்பதைக் கண்டுகொள்க.

 

தீயப் பாதையில் சென்று தீயச் செயல்களைச் செய்யாதவன் என்றால் அவன், அவ்வளவாக ஆபத்தில்லாதவன் என்பதைக் கண்டுகொள்க.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


bottom of page