16/02/2024 (1077)
அன்பிற்கினியவர்களுக்கு:
உன்னை விட்டு நான் விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று இயேசு பிரான் சொன்னதைப் போல என்னவரும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், அவர் ஆண்டவர் இல்லையே! அவர் அறிவுடையார். அறிவு காட்டும் பாதையில் கடுகியே பயணிப்பவர் அவர். உணர்ச்சிகளின் பாதை அவருக்குத் தெரியாதது பெரும் குறையே!
என் மனம் இங்கே கிடந்து அடித்துக் கொள்ள “ உன்னை ஒரு போதும் பிரியமாட்டேன்” என்றவர் சென்றுவிடத் துடிக்கிறார். வள்ளுவப் பெருமானின் வாக்கு பொய்குமா என்ன? எதைக் கொண்டு என் மனத்தை நான் தேற்றுவேன் என்று புலம்புகிறாள்.
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். - 1153; பிரிவு ஆற்றாமை
அறிவுடையார் கண்ணும் பிரிவு ஓர் இடத்து உண்மை யான் = அறிவின் பாதையில் பயணிக்கும் அவர் பிரிந்து செல்வது என்பது அவருக்குச் சரியானதாகத் தோன்றுவது உண்மைதான்; தேற்றம் அரிது = ஆனால், அந்த அறிவு அவருக்குச் சொல்லக் கூடாதா என்னைத் தேற்றுவது அரிது என்று!; அரோ - அசை நிலை - பொருள் கிடையாது.
அறிவின் பாதையில் பயணிக்கும் அவர் பிரிந்து செல்வது என்பது அவருக்குச் சரியானதாகத் தோன்றுவது உண்மைதான். ஆனால், அந்த அறிவு அவருக்குச் சொல்லக் கூடாதா என்னைத் தேற்றுவது அரிது என்று!
பிரிந்தால் நான் வருத்தப்படக் கூடாது என்ற கட்டளை வேறு. இதில் என் குற்றம் என்ன? நம்பியது குற்றமா? என்று கேட்கிறாள்.
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு. - 1154; - பிரிவு ஆற்றாமை
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் = என்னைப் பார்த்த முதல் கணமே உன்னை விட்டு நான் ஒருபோதும் பிரியேன் என்ற வாக்குறுதியை அளித்து அஞ்சேல் என்றவர் என்னைவிட்டு பிரிந்து சென்றால்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ = அவர் சொன்ன சொல்லை நம்பியிவளின் தவறு எங்கிருக்கிறது. நான் ஏன் இந்தப் பிரிவுத் துன்பத்தில் உழல வேண்டும்.
என்னைப் பார்த்த முதல் கணமே உன்னை விட்டு நான் ஒருபோதும் பிரியேன் என்ற வாக்குறுதியை அளித்து அஞ்சேல் என்றவர் என்றவர் என்னைவிட்டு பிரிந்து சென்றால், அவர் சொன்ன சொல்லை நம்பியிவளின் தவறு எங்கிருக்கிறது. நான் ஏன் இந்தப் பிரிவுத் துன்பத்தில் உழல வேண்டும்.
இப்படியாக அவள் தன் தோழியிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
அவன் இன்னும் பிரிந்து சென்றிடவில்லை! இல்லத்துள்தான் இருக்கிறான். காலையில் அவன் செய்த அந்த அதிகப்படியான செயல்கள் அவளை இப்படிப் புலம்ப வைத்துள்ளன. அவன் தன்மட்டில் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறான்!
அவள் மேலும் தன் தோழியிடம் கடிந்து சொல்கிறாள். இங்கே பார், நீ எனக்கு உதவுவது உண்மையெனில் அவரை எங்கும் போகாமல் செய். அப்படி அவர் சென்றுவிட்டால் மீண்டும் அவர் என்னைச் சேர்வார் என்பதற்கு நான் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. - 1155; - பிரிவு ஆற்றாமை
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் = என்னுயிரைக் காப்பவள் நீயாயின் என் உயிரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அவரை என்னிடமிருந்து பிரியாமல் பாதுகாக்க வேண்டும்; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது = அவ்வாறில்லாமல், அவர் பிரிவாராயின் என் உயிரும் நீங்கும். அவர் என்னை மீண்டும் சேர்வது என்பது நடக்காது.
என்னுயிரைக் காப்பவள் நீயாயின் என் உயிரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அவரை என்னிடமிருந்து பிரியாமல் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல், அவர் பிரிவாராயின் என் உயிரும் நீங்கும். அவர் என்னை மீண்டும் சேர்வது என்பது நடக்காது.
இவ்வாறு அவள் பயமுறுத்துகிறாள். என்ன நடக்கிறது என்பதை நாளைப் பார்ப்போம்.
மேலும் பேசுவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント