15/07/2022 (504)
சாதித் தளைகளை உடைக்க வேண்டுமா? செய்ய வேண்டியது, நேற்று பார்த்த அந்த அறுவகையுள் இணைந்திட வேண்டும்.
அதிலே, அனைவராலும் முயலக் கூடியது, மிகவும் சுலபமானது கல்வி. அதனால்தான் கல்வியிலே உயர வேண்டும்.
இறைவனின் அடியார்களாக பல கோடி பேர்கள் இருந்திருக்கலாம், இருக்கலாம், எதிர்காலத்திலும் வரலாம். ஆனால், நற்றமிழில் பாடியவர்களை மட்டும்தான் நாம் சமயக் குரவர்கள் என்றும், சந்தானக் குரவர்கள் என்றும், நாயன்மார்கள் என்றும், ஆழ்வார்கள் என்றும், அருளாளர்கள் என்றும் போற்றுகிறோம் அல்லவா?
அவர்கள் அனைவரும் பல் வேறு சாதிப் பிரிவுகளில் இருந்து வந்தாலும் அதிலேயே ஆழ்ந்து விடாமல் மேலேறியவர்கள் இல்லையா? எதனால் அவர்களுக்குத் தனி மதிப்பு? அவர்களின் புலமையினால், ஞானத்தினால் அல்லவா? இது நிற்க.
பிறப்பைப் பற்றி துரியோதனன் என்ன சொல்கிறான் என்று கேட்போம்.
ஆச்சாரியாரே கேளுங்கள்.
நரசிம்மப் பெருமான் தூணிலிருந்து தோன்றினார்; சிவப் பரம்பொருள் மூங்கிலில் பிறந்தார்; அகத்திய முனியும், துரோணாச்சாரியாரும் தோன்றியது ஒரு கும்பத்திலிருந்துதானே?
இவ்வளவு ஏன்? அடிகளாரும் (கிருபாசாரியாரும்), முருக வேளும் தோன்றியது நாணல் காட்டில் அல்லவோ?
(முருகப் பெருமான் சர வணத்தில், அதாவது புற்கள் மலிந்த வணத்தில் தோன்றியதால் சரவணன் ஆனார். கிருபாச்சாரியார் என்றும் வாழும் ஏழு சிரஞ்சீவிகளுல் ஒருவர். இந்த இருவரையும் சரச்ஜென்மா என்றும் குறிப்பிடப் படுகிறார்கள்.)
அடிகளாரே, இந்த பிறப்பறியா பிறப்புகளை நாம் இழிவு படுத்துவது இல்லையே? ஒரு பெரும் வீரனை, பிறப்பைக் கொண்டு தாக்குவது அழகா?
“அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான்,
பரவை உண்ட முனியும் இவ் பரத்துவாசன் மைந்தனும்
ஒருவயின் கண் முன்பிறந்த ஓண்சரத்தினல்லவோ
அரியவென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே!” பாடல் – 69, வாரணாவதச் சருக்கம், ஆதி பருவம், வில்லி பாரதம்
பரவை = கடல்; சரம் = புல்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments