அரும்பயன் ஆயும் அறிவினார் ... குறள் 198
20/11/2021 (270)
நன்றி. எனதருமை நண்பர் நல்ல பின்னூட்டங்களையிடுகிறார் நமது www.easythirukkural.com வலைப்பக்கத்தில். வாய்ப்பினை ஏற்படுத்தி வாசிக்கவும். அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் முதல் ஆறு பாடல்களில் பயனில சொல்லாமையின் குற்றங்களைக் கூறினார்.
அடுத்துவரும் மூன்று பாடல்கள் மூலம் யார் அதைச் செய்யமாட்டாங்க என்று சொல்கிறார்.
ஏழாவது குறளை நாம் ஏற்கனவே பார்த்தோம். மீள்பார்வைக்காக:
“நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.” --- குறள் 197; அதிகாரம் - பயனில சொல்லாமை
நயனில = இனிமையற்ற
பொருள்: சான்றோர்கள் (ஒரு வேளை) இனிமையற்ற வார்த்தைகளைப் பேசினாலும் பேசலாம் ஆனால் பயனற்ற வார்த்தைகளை கொஞ்சமும் பேசாமை நல்லது.
Human beings are goal driven. மனிதர்கள் எப்பவுமே குறிக்கோளோடத்தான் இயங்குகிறார்கள். அது எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதில் சிறந்த பயன்களையே நாடுபவர்கள் அறிவுள்ளவர்கள். அத்தகைய அறிவுள்ளவர்கள் பெரும் பயன் இல்லாத சொற்களைப் பேசமாட்டாங்களாம். நம் பேராசான் சொல்கிறார்.
நாம குழந்தகளுக்கு சொல்வோம் இல்லையா, நல்ல பசங்க இதெல்லாம் பண்ண மாட்டாங்க. நீ நல்ல பையனா இல்லையா? ன்னு கேட்ட உடனே அந்தக் குழந்தை ஆமாமாம், நான் சமத்துன்னு சொல்லும், நாம சொல்வதையும் கேட்கும். அதுபோல நம் பேராசான் நம்மை வழி நடத்துவது போல இருக்கு இந்த மூன்று குறள்களும் (197, 198, 199).
“அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.” --- குறள் 198; அதிகாரம் – பயனில சொல்லாமை
அரும்பயன் ஆயும் அறிவினார் = சிறந்த பயன்களை ஆராயும் அறிவுள்ளவர்கள்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் = பெரும் பயன் இல்லாத சொற்களைப் பேச மாட்டார்கள்.
நாம அறிவுள்ளவங்கதானே? அதிலென்ன சந்தேகம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
