அரியஎன்று ஆகாத இல்லை ... குறள் 537
Updated: Nov 26, 2021
23/11/2021 (273)
பொச்சாப்பு என்றால் கடமைகளைச் செய்வதை மறப்பது அல்லது தவிர்ப்பது. இது மனம் சம்பந்தப் பட்டது.
இது சாதாரணமாக இருக்கும் மறதி நோய் அல்ல. மறதி நோய் மூளை சம்பந்தப் பட்டது.
மறதியே இருக்கக்கூடாதுன்னு இல்லை.
மறப்பதும் நன்று என்று சொல்லியிருக்கிறார் நம் வள்ளுவப் பேராசான். மீள்பார்வைக்காக குறள் 108.
எதை மறக்க வேண்டுமோ அதை மறக்கனும். இல்லையென்றால் குழப்பம்தான்.
திருக்குறளில் சிறந்த குறள் எதுன்னு என்னைக் கேட்டா, என்னையும் நன்றாக வாழ வைக்கும், நம் எல்லோரையுமே உயர்த்தக் கூடிய, மேலும் மறக்கக்கூடாத குறள் தான் 108வது குறள்:
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.” --- குறள் 108; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
அப்போ, பொச்சாப்பு என்பது கடமையில் இருந்து தவறும் மறதி. இது மகிழ்ச்சியால் வரும், பெருகி வரும் வெற்றியால் வரும், அலட்சியத்தால் வரும். இப்படி பல காரணங்கள் இருக்கும். இதைத்தான் தவிர்க்கனும்.
இந்த மறதியைத் தவிர்த்து விடுபவர்களுக்கு அரிய செயல், முடியாத செயல் என்று ஒன்றும் கிடையாதாம்.
“அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.” --- குறள் 537; அதிகாரம் – பொச்சாவாமை
பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின் = கடமையை மறக்காம செய்பவர்களுக்கு; அரிய என்று ஆகாத இல்லை =செய்வதற்கு முடியாதுன்னு சொல்வது போல ஒரு காரியமும் கிடையாது;
பொச்சாவாக்கருவி என்று ஏன் சொல்கிறார் என்றால் இது ஒரு மனதின் செயல். மனம் என்பது ஒரு அந்தக்கரணம், அதாவது உள்ளிருந்து இயக்கும் கருவி. அதனால் பொச்சாவாக் கருவி என்கிறார். இடைவிடாத நினைப்பும் தளராத முயற்சியும் இருப்பின் வெற்றி நிச்சயம் என்பதைக் குறிக்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
