01/12/2022 (637)
ஒருத்தரை ஒரு தலைமை நம்பிக்கைக்கு பாத்திரமாக வைத்துக்கொள்ள என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று சொல்லிவருகிறார் நம் பேராசான்.
முதல் குறளில், அவன் மட்டில் அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் காரனமாக பிறழ்பவனாக இருக்கக் கூடாது என்றார்.
இரண்டாம் குறளில், நல்ல குடியில் பிறந்திருந்தாலும் அதுவே தகுதியாகிவிடாது. அப்படி பிறந்தாலும் அவன் குற்றமற்றவனாக இருக்க வேண்டும் என்றார். குற்றங்கள் என்பது காமம், கோபம் முதலியன.
மூன்றாம் குறளில் என்ன சொல்கிறார், என்றால் படித்தவனாக, அதுவும் அரிய நூல்களை, அதாவது அவன் பணியாற்ற இருக்கும் வேலைக்குத் தக்க அரிய நூல்களைக் கற்றவனாக இருக்க வேண்டும். அவனும் “ஆசு அற்றார்” ஆக இருக்க வேண்டும். அதாவது, அவனிடமும் குற்றங்கள் இருக்கக் கூடாது.
சரி, அவனைத் தேர்ந்தெடுக்கலாமா என்றால் கொஞ்சம் பொறுங்க என்கிறார். நன்கு படித்திருக்கிறார்கள், குற்றமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றாலும் அவர்களிடமும் ‘ஒரோவழி’ குற்றங்கள் தெரியலாம். அதனால், அவர்களை கண்டறிந்து தவிர்க்க என்கிறார்.
‘ஓரோவழி’ என்றால் ‘எப்போதாவது’ என்று பொருள்.
“அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.” --- குறள் 503; அதிகாரம் – தெரிந்து தெளிதல்
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் = அரிய நூல்கள் பல கற்று, குற்றமற்ற வர்களிடமும்;
வெளிறு = வெண்மை, அறியாமை; தெரியுங்கால் = (ஒரோவழி தெரியும் என்பதால் தெரியுங்கால்) எப்போதாவது வெளிப்படும்;
வெளிறு இன்மை அரிது = அறியாமை இல்லாமல் இருப்பது அரிது.
நம்மாளு: இப்படியெல்லாம் நுனுக்கிப் பார்த்தால் எப்படி ஐயா ஆள் கிடைக்கும்?
ஆசிரியர்: இதே கேள்வியைத்தான் யாரோ நம் பேராசானிடம் எழுப்பி இருக்காங்க. அதற்கு பதிலாக அடுத்தக் குறளை வைக்கிறார். நாளைக்குப் பார்ப்போமா?
-என்று கூறி நடையைக் கட்டினார் என் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments