top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அரியவற்றுள் எல்லாம் அரிதே ... குறள் 443, 395

30/03/2022 (397)

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஔவையார் பெருந்தகை. அப்படி மானிடராய் பிறந்தவர்கள் தலைவர்களாகவும், வழி நடத்துபவர்கள் ஆகவும் ஆவது அரிது. அதுவே ஒரு அரிய பேறு. அத்தகைய தலைமைக்குத் தனிச் சிறப்பு எது என்று கேட்டால் பெரியவர்களைப் பேணித் தம்மவர்களாக இருத்திக் கொள்ளுதலாம் – சொல்கிறார் நம் பேராசான்.


தற்கால மேலாண்மை (management) வல்லுனர்கள் பரிந்துரைப்பதும் அதுதான். அதாவது, பெரியவர்களை, வல்லவர்களை consultants, coaches (ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள்) ஆக வைத்துக் கொள்வதை வலியுறுத்துகிறார்கள்.


நமக்கு ஒரு தடை ஏற்பட்டால், அதன் காரணம் விளங்க வேண்டுமா, அதை சமாளிக்க வேண்டுமா உடனே நாம் செய்ய வேண்டியது நமக்கு முன்னால் சென்றவர்கள் அதனை எவ்வாறு சமாளித்தார்கள் என்பது துணை செய்யும். ஆயிரம் புத்தகங்கள் படிக்கலாம். நிச்சயம் அது வழிகாட்டும். ஆனால், அனுபவம் வாய்ந்தவர்கள் பக்கத்திலேயே இருந்தால் அதன் பெருமதியே தனி.


அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.” --- குறள் 443; அதிகாரம் – பெரியாரைத் துணைக் கோடல்


பெரியவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து நமக்குத் துணையாக இருக்க வைத்தல், நமக்கு கிடைத்துள்ள அரிய பல பேறுகளில் அரியது, சிறந்தது.


பெரியாரைப் பேணித் தமராக் கொளல் = பெரியவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து நமக்குத் துணையாக இருக்க வைத்தல்; அரியவற்றுள் எல்லாம் அரிதே = நமக்கு கிடைத்துள்ள அரிய பல பேறுகளில் அரியது, சிறந்தது.


இந்தக் குறள் அரசர்களுக்குச் சொல்லும் பகுதியில் வருகிறது என்றாலும் நம் எல்லைக்குள் நாமும் மன்னர்கள்தானே! அனைவருக்கும் இது பொருந்தும் என்பதனால் ‘நமக்கு’ என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். அரசர்களுக்கு, தலைவர்களுக்கு இது மிக, மிக அவசியம். வளரத் துடிப்பவர்களுக்கு இது மிக, மிக, மிக, மிக அவசியம்.


நாம ஒரு குறளை பார்த்து இருக்கிறோம். அதனை மீண்டும் பார்த்துக் கொள்வது நலம் பயக்கும்.


உடையார்முன்இல்லார்போல்ஏக்கற்றும்கற்றார் கடையரேகல்லாதவர்” --- குறள் 395; அதிகாரம் - கல்வி


பொருள் உடையவர்கள் முன் ஏதும் இல்லா வறியவர்கள் எப்படி தனக்கு உதவுமாறு கேட்பார்களோ அது போன்று நின்று கற்க வேண்டுமாம். அதற்கு கூச்சப் பட்டுக் கொண்டு தயங்கினால் நாம எப்பவும் கடைசி பெஞ்சுதான் (மேசைதான்).


பெரியவர்களைத் துணைக்கு இருத்திக் கொள்வோம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




8 views0 comments

Comments


bottom of page