top of page
Search

அருளல்ல தியாதெனிற் ... 254, 260

15/12/2023 (1014)

அன்பிற்கினியவர்களுக்கு:

பிற உயிர்களைக் கொல்லாமையும், புலாலை உண்ணாதவனையும் எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் என்று குறள் 260 இல் பார்த்தோம், காண்க 12/12/2023.

 

அருளுக்குப் புறம்பானவை கொல்லாமையும், அந்த ஊனைத் திண்ணாமையுமாம்.

 

அந்தக் கருத்தை மேலும் ஒரு குறளில் வலியுறுத்துகிறார். இதில் சொல் விளையாட்டு விளையாடுகிறார்.

 

“இன்பம் துன்பம் வந்து வந்து போகும்” என்றால் இன்பமும் வந்து வந்து போகும்; துன்பமும் வந்து வந்து போகும் என்று பொருள்.

 

“இன்பம் துன்பம் வெளிச்சம் இருட்டுப் போல” என்றால் இன்பமானது வெளிச்சம் போல; துன்பம் இருட்டுப் போல என்று பொருள்.

 

இவ்வாறு பொருள் காண்பது “நிரல் நிரை அணி”. இதில் குறிப்பு என்னவென்றால் நாம்தாம் இதனைச் செய்ய வேண்டும். படைப்பாளிகள் அவர்களின் கருத்துகளைத் தாங்கள் நினைக்கும் விதத்தில் கட்டுவார்கள். நாம்தாம் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த நூலின் அமைப்பைக் கொண்டு சரியான பொருளை எடுக்க வேண்டும்.

 

அது போன்றதொரு குறள்தான் நாம் இப்போது பார்க்கப் போவது.

 

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் தினல். – 254; - புலால் மறுத்தல்

 

கோறல் = கொல்லுதல்; கோறல் பொருள் = இறைச்சி; அருள் யாது எனின் கொல்லாமை = அருள் என்பது என்னவென்றால் பிற உயிர்களைக் கொல்லாமை; அல்லது யாது எனின் கோறல் = அருள் அல்லாதது எதுவென்றால் பிற உயிர்களைக் கொல்லுதல்; அல்லது அவ் ஊன் தினல் = அருள் அல்லாதது அந்த இறைச்சியை உண்ணுதல்.

 

அருள் என்பது என்னவென்றால் பிற உயிர்களைக் கொல்லாமை. அருள் அல்லாதது எதுவென்றால் பிற உயிர்களைக் கொல்லுதல். கொல்வதனால் வரும் பொருள் இறைச்சி. அருள் அல்லாதது அந்த இறைச்சியை உண்ணுதல்.

 

இந்தக் குறளில் “அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்”

என்கிறார். அருளையும், அருள் அல்லாததையும் முதலில் வரிசைப்படுத்தி கொல்லாமையையும், கோறலையும் பின்னர் வரிசைப் படுத்துகிறார். அஃதாவது, அருள் என்பது கொல்லாமை; அல்லாதது என்பது கொல்லுதல் என்கிறார். நிரல் நிரை.

 

பின்னர், “கோறல் பொருள் அல்லது அவ் ஊன் தினல்” என்கிறார். கோறல்-பொருள் (ஊன்), அல்லது (அருள் அல்லாதது) என்று இரண்டினை வரிசைப்படுத்தி அதற்கு ஈடாக அவ் ஊன், திண்ணல் என்று வரிசைப் படுத்துகிறார். கோறல் பொருள் அந்த ஊன் (இறைச்சி) என்றும், அருளல்லது அந்த ஊனைத் திண்ணல் என்றும் சொல்கிறார். நிரல் நிரை.

 

குறள் 254 இல் கொல்லுதல், அந்த ஊனை உண்ணுதல் அருள் அல்ல என்றவர், அப்படி இருந்தால் என்ன பயன் என்று குறள் 260 இல் சொன்னார். கொல்லாமலும் அந்த ஊனைத் திண்ணாமலும் இருந்தால் எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் என்கிறார். அஃதாவது உயிர்கள் உங்களை வாழ்த்தும் என்கிறார்.

 

மீள்பார்வைக்காக:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும். – 260; புலால் மறுத்தல்

 

உயிர்கள் வாழ்த்தட்டும்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page