அறம் சாரா நல்குரவு ... குறள் 1047
29/01/2022 (338)
துன்பங்கள் மூன்று வழிகளில் வரும். அவையாவன: 1) தன்னால், 2) பிறரால், 3) எதனாலே என்று காரணம் இல்லாமல். இதிலே, கடைசியா சொன்னது தெய்வக் குற்றம், வினைப் பயன், முற்பிறப்பினால் வருவது என்றெல்லாம் சொல்லப் படுவது.
பிறரால் வருவதும், ஏன் என்று காரணம் தெரியாமல் வருவதும் நம் கைகளில் இல்லை. அதனால், அந்த இரண்டையும் விட்டுவிடுவோம்.
தன்னால் வருவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாமாம். செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதால் வருவது; செய்யக்கூடாததை செய்வதால் வருவது.
அறத்திற்கும் அதேதான். ஆனால் என்ன? மேலே சொன்னதிற்கு எதிர். விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல். இதுதான் அறம்.
நாம நம்ம தலைப்புக்கு வருவோம். தன்னால் வரும் வறுமை, அதாங்க ‘நல்குரவு’, வருவதற்கும் இரண்டு காரணங்கள்தான். ஒன்று வாரி, வாரிக் கொடுப்பதால் வருவது; மற்றொன்று, வாரி இறைப்பதால் வருவது. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. தேவையானவர்களுக்கு வாரிக் கொடுப்பது வள்ளல் தன்மை – ஏற்றுக் கொள்ளக் கூடியது, வேண்டக் கூடியது; வாரி இறைப்பது ஆடம்பரம், அகங்காரம் – தவிர்க்க வேண்டியது, தடுமாற வைப்பது.
ஒரு கற்பனை. ஒரு தாயிடம் போய், ஒருத்தர் கேட்கிறார். “அம்மா, நீங்க, உங்க பெரிய மகன் எல்லாம் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கீங்க. ஆனால், உங்க சின்ன மகனை ஏன் அம்மா விட்டுட்டீங்க. பார்பவர்களிடமெல்லாம் கையை நீட்டி உதவி கேட்கிறார். அவர் நிலை ரொம்ப மோசமாக இருக்கே, ஏன்?”
அதற்கு, அந்தத் தாய், “தம்பி, நீங்க சொல்வதைக் கேட்கும் போது மனசு கஷ்டமாகத்தான் இருக்கு. என் இரண்டு மகன்களுக்கும் சமமாகத்தான் பார்த்துக் கொண்டேன். இருவருக்கும் ஒரு போலத்தான் பாகம் பிரித்தோம். பெரியவன், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறான். சின்னவன், செய்தது எல்லாம் அறத்திற்கு மாறான வழிகளில் சென்றதுதான். அவன் மற்றவங்களுக்கு கொடுத்து அழித்திருந்தால் வருத்தப்படலாம். அவனுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளை பல வழிகளில் அழித்து ஒழித்து விட்டான். விடுங்க தம்பி, எனக்கு யாரோ அவன்” என்று சொல்லி விலகிவிட்டார். நம் பேராசான் குறள்தான் கவனத்திற்கு வந்தது. இதோ அந்தக் குறள்:
“அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன்போல நோக்கப் படும்.” --- குறள் 1047; அதிகாரம் – நல்குரவு
அறம் சாரா நல்குரவு = அறத்திற்கு மாறுபட்டு நின்றதால் வந்த வறுமை; ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும் = பெற்றதாயாலும் விலக்கப் படுவார்கள். அவன் யாரோ என்பது போலப் பார்ப்பார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
