அறவினையும் ஆன்ற பொருளும் ... 909, 24
Updated: Jun 7, 2022
06/06/2022 (465)
பெண் ஏவல் செய்பவர்கள் “நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்…” என்றார் குறள் 908ல். அதாவது, நண்பர்களுக்கு உதவ மாட்டான்; நல்ல செயல்களைச் செய்யவும் அவனுக்கு நேரம் இருக்காது.
மேலும், அறவினைகளையும், அதற்கு உறுதியாக இருக்கும் பொருட் தேடலும், மற்ற பல இன்பம் தரும் செயல்களையும்கூட செய்யமுடியாமல் போகுமாம், பெண் ஏவல் செய்பவர்களுக்கு!
அதாவது, ஒரு பாச மயக்கத்தில் கட்டுண்டு இருப்பார்கள் என்கிறார்.
“அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.” --- குறள் 909; அதிகாரம் – பெண்வழிச்சேறல்
அறவினையும் = அறச்செயல்களும்; ஆன்ற = அமைந்த; ஆன்ற பொருளும் = அதற்கு உறுதியான பொருட் தேடலும்; பிறவினையும் = மற்ற புலன் இன்பங்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் = பெண் ஏவல் செய்பவர்களுக்கு வாய்ப்பில்லை.
அதாவது, தம்பி, நீ பாச மயக்கத்தில் இருந்தால் உனக்கும் பயன் இல்லை, உற்றாருக்கும் பயன் இல்லை - என்று கடந்த இரு பாடல்களால் எடுத்துரைக்கிறார்.
அறிவா, உணர்ச்சியா என்ற போராட்டம் எப்போதும் நடந்து கொண்டு இருக்கும். பெரும்பாலும் நல் உணர்ச்சியின் வழிதான் சிறந்தது. ஆனால், உணர்ச்சிகள் இருவகைப் பட்டதால் நம்மைத்தாழ்த்தும், உணர்ச்சிகளை அறிவு எனும் அங்குசம் கொண்டுதான் அடக்கவேண்டும். நாம் ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்துள்ளோம் – காண்க 06/08/2021 (164).
“உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.” – குறள் 24; அதிகாரம் – நீத்தார் பெருமை
உரன் = திண்மை, அறிவு; தோட்டியான் = அங்குசத்தால்; ஓரைந்தும் காப்பான் = (யானைகளாகிய) ஐந்து புலன்களையும் அது அது நினைத்தாற் போல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பு= (எல்லா நிலத்திலும் மிகச்) சிறந்தது என்னும் வீட்டு நிலத்திற்கு; ஒர் வித்து = ஒரு விதையாம்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
