08/04/2023 (765)
அன்பிற்கினியவர்களுக்கு: வணக்கம்.
‘உழை’ என்றால் உழைத்தல், பாடுபடுதல், வருந்துதல், வேலை செய்தல் என்றெல்லாம் பொருள்படும்.
அது மட்டுமல்லாமல், உழை என்றால் இடம், பக்கம், அண்மை என்றும் பொருள்படும்.
மேலும், உழை என்றால் ஆண் மானையும், கலை மானையும்கூட குறிக்கும்!
இப்படி, உழை என்ற சொல்லுக்கு பலப்பல பொருள்கள் இருக்கின்றன!
நாம் முன்பு ஒரு குறள் பார்த்துள்ளோம். காண்க 20/02/2023 (718),மீள்பார்வைக்காக:
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.” --- குறள் 594; அதிகாரம் – ஊக்கம் உடைமை
இந்தக் குறளில் ‘உழை’ என்றால் ‘இடம்’ என்று பொருள்.
அசைவிலா ஊக்கம் உடையான் உழை = தளர்வில்லாத ஊக்கம் உடையவனிடம்; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் = செல்வம் தானே வழியை உருவாக்கிக் கொண்டு செல்லும்.
தளர்வில்லாத ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வழியை உருவாக்கிக் கொண்டு செல்லும்.
இது நிற்க.
‘உழைக்கண்ணாளன்’ என்றால் நண்பன், தோழன் என்று பொருள்.
‘உழை இருந்தான்’ என்றால் கூடவே இருப்பவன். அதாவது, அரசனுக்கு அமைச்சன்!
உழை இருப்பவரின் செயல் எப்படி இருக்க வேண்டும் என்று இரு பாடல்களின் மூலம் பாடம் சொல்கிறார்.
முதல் பாடம்: எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், உலகத்து இயற்கையைத் தெரிந்து நடக்க வேண்டும் என்றார் குறள் 637ல். காண்க 06/04/2023.
ஒருவர் அரசனிடம் வந்து, “அரசே, நம்ம ஊர் எல்லையில் இருக்கின்ற அணையில் நீர் கசிவு ஏற்பட்டு இருக்கிறது” என்கிறார்.
அரசன்: எவ்வளவு நீர் கசிவு?
“தற்போது, மிகவும் சிறியதாகத்தான் இருக்கிறது” என்கிறார்.
அரசன்: “சின்ன செய்தியெல்லாம், ஒரு செய்தியாக எடுத்துவந்து என் நேரத்தை வீணடிக்கிறாய். எனக்கு வேறு வேலையில்லை என்று நினைத்தாயா? என் முன் நிற்காதே ஒடு” என்று சொல்லி வந்தவரை துரத்திவிடுகிறார்.
இந்த அரசனை என்னவென்று சொல்வீர்கள்?
சொல் புத்தியும் எடுத்துக்கமாட்டார்; சொந்த புத்தியும் கிடையாது!
இந்த மாதிரி அரசர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களுக்கு அமைச்சராக இருப்பவர் பாடு கடினம்தான். இந்த அரசனின் இயற்கையே மடத்தனம் தான்!
நம் பேராசான் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்: என்னதான் நமக்கு அறிவு இருந்தாலும் உலகத்து இயற்கைக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று!
அதனால், நாம் எதுவும் சொல்லாமல் இருந்துவிடுவோம் என்று இருக்கலாமா?
அதுதான் கூடாது என்கிறார் நம் பேராசான்.
அந்த அரசனானவன் சொல் புத்தியைக் கேளாமலும், சுய புத்தியும் இல்லாமல் இருந்தாலும், அணையின் கசிவு தற்போது சிறிதாக இருப்பினும், அந்த அணை விரைவில் உறுதியாக உடைந்து நாட்டை அழைக்கும் என்று எடுத்துச் சொல்ல வேண்டுமாம்!
இதுதான் இரண்டாம் பாடம்: புத்தி கெட்டத் தலைவனாக இருந்தாலும், அமைச்சர் என்பவர், உறுதியாக என்ன நடக்கும் என்பதை இடித்துக் கூற வேண்டும்.
“அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.” --- குறள் 638; அதிகாரம் – அமைச்சு
அறி கொன்று = அறிதலை இழித்து, பழித்து; (அறி – முதல்நிலை தொழிற் பெயர்)
அறி கொன்று அறியான் எனினும் = அரசனானவன், அறிந்து சொல்லியவரின் சொல்லை ஏற்காமலும், அவனுக்கே சொந்த புத்தி இல்லாமல் இருப்பினும்;
உழையிருந்தான் கடன் உறுதி கூறல் = அமைச்சனின் கடமை, விளையப் போகும் நன்மை, தீமைகளை அரசன் ஏற்குமாறு சொல்லுதலாகும்.
அரசனானவன், அறிந்து சொல்லியவரின் சொல்லை ஏற்காமலும், அவனுக்கே சொந்த புத்தி இல்லாமல் இருப்பினும், அமைச்சனின் கடமை, விளையப் போகும் நன்மை, தீமைகளை, அரசன் ஏற்குமாறு சொல்லுதலாகும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires