11/10/2022 (589)
தெருக்களில் அங்காங்கே சிலரும், பலரும் கூட்டம் கூட்டமாக இங்கேயும் அங்கேயும் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டு மூக்கு மேல் விரலை வைத்து “தெரியுமா சேதி” என்றும், இன்னொரு விரலால் நம் களவு வாழ்க்கையை சுட்டிக் கொண்டு பழி பேசிக்கொண்டு இருக்கின்றது.
“சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் …” நற்றினை பாடல் 149
இப்படி ஒரு அழகான பாடல் நம் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. முழுப் பாடலையும் காலத்தின் அருமைகருதி என் ஆசிரியர் தவிர்த்துவிட்டார்.
அம்பல், அலர் என்பது ஊரில் பழித்துக் கூறுதலும், புறம் பேசுதலும் ஆகும்.
மறுகு(பெ) என்றால் தெரு, வீதி என்று பொருள்; மறுகு(வி) என்றால் சுழல், மயங்கு.
நாம் குறளுக்கு வருவோம்.
அவன்: என் காம நோய் இருக்கிறதே அதற்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது.
நம்மாளு: என்ன பயம்?
அவன்: இது ஒரு வேளை ஊராருக்கு தெரியாம இருக்குமா என்ற பயம். அதனாலே, அது ஊராரின் வாய்களுக்குள் புகுந்து ‘ஊர் வம்பாக’ சுழன்று கொண்டு இருக்கிறது.
நம்மாளு: (‘ங்கே’ன்னு விழித்துக் கொண்டு.) ஊர் தான் எப்பவோ பேச ஆரம்பித்து விட்டதே. அது பேச வேண்டும் என்று எல்லா காரியமும் பண்ணியதும் நீங்கதானே அண்ணே! நீங்க கொஞ்சம் விவகாரமான ஆள்தான் போல. மடல் ஏறுவீங்கன்னு பார்த்தா அது இப்போது இல்லை போல இருக்கு, சரி நடக்கட்டும், என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்.
“அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.” --- குறள் 1139; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்
எல்லாரும் அறிகிலார் என்றே = யாருக்கும் தெரியவில்லை என்று; என் காமம்
மருண்டு மறுகில் மறுகும் = என் காம நோயானது பயந்து எல்லோருக்கும் தெரியும் விதமாக ஊர்வம்பாக தெருக்களில் சுழன்று கொண்டுள்ளது.
யாருக்கும் தெரியவில்லை என்று என் காம நோயானது பயந்து எல்லோருக்கும் தெரியும் விதமாக ஊர்வம்பாக தெருக்களில் சுழன்று கொண்டுள்ளது.
விளைவு என்னாகும் என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்

Comments