அற்றம் மறைக்கும் பெருமை ... குறள் 980
15/08/2022 (534)
அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள். இது ஒரு பெருமையான நாள் தான்.
மானம் எனும் அதிகாரத்தை அடுத்து பெருமை (98 ஆவது) எனும் அதிகாரம் வைத்துள்ளார் நம் பேராசான். மானம் காக்கப்படின் வருவது பெருமை.
பாட்டு எழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்; குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
சிலருக்கு மற்றவர்களைச் சீண்டிப் பார்பதிலே இன்பம்; சிறுமை படுத்துவதில் இன்பம். “ஒரு விரல் சுட்ட, மூன்று விரல்கள் நம்மைச் சுட்டும்.” என்பதை அறியாதவர்கள் இல்லை அவர்கள்.
ஆங்கிலத்தில் Best form of defence is offence என்று ஒரு பழமொழி இருக்கிறது. சிறந்த தற்காப்பு என்பது முதலில் நாம் முந்திக் கொண்டு அடித்துவிடுவதுதான்! இதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள்.
ஆனால், வள்ளுவப் பெருந்தகை மாறுபடுகிறார்.
மற்றவர்கள் செய்யும் சின்ன, சின்ன செய்கைளை ஊதிப் பெரிதாக்குவது, சீண்டிப் பார்த்து சிற்றின்பம் காண்பது பெருமை இல்லை என்கிறார். அவைதாம் கேடு கெட்ட சிறுமை என்கிறார்.
“அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.” --- குறள் 980; அதிகாரம் - பெருமை
அற்றம் = சிறிய செயல்கள், கடந்து போக வேண்டியவை, கவனத்தை செலுத்த தகுதியற்றவை;
அற்றம் மறைக்கும் பெருமை = பெரியோர், பெருமை மிக்கோர் எனப்படுபவர் மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டி, சிறிய செயல்களை ஊதிப் பெரிதாக்க மாட்டார்கள்;
சிறுமைதான் குற்றமே கூறி விடும் = சிறியோர்கள்தான் மற்றவர்களின் சிறிய செயல்களை பெரிதாக்கி இன்பம் காண்பார்கள்.
அதாவது, முக்கியமான செய்திகளை மறைத்து, ஒன்றுக்கும் பயனில்லா பேச்சுகளை பேசும் வாய் சொல் வீரர்கள் அவர்கள். அதில் எப்படி பெருமை இருக்க முடியும் என்று கேட்கிறார் நம் பேராசான்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
