16/08/2023 (894)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
திரு. புல்லறிவாளர் தம்மைத்தாமே வியந்து கொள்ளும் பண்புகளைப் மூன்று குறிப்புகளால் காட்டுகிறார்.
முதலில், “ஓண்மை உடையம் யாம்” என்றார். அஃதாவது, அவருக்குத் தெரியாதது என்று ஒன்றும் இல்லை என்று அலம்பல் செய்வார் என்றார் குறள் 844 இல்.
இரண்டாவதாக “கல்லாத மேற்கொண்டு ஒழுகல்” என்றார். அஃதாவது, தனக்குத் தெரியாததைச் சொல்லிக் கொண்டுத் திரிந்தாலும் பரவாயில்லை; செயலிலும் இறங்கி மூக்குடைபடுவார். மக்களின் நம்பிக்கையை இழப்பார் என்றார் குறள் 845 இல்.
மூன்றாவதாக, அவர் செய்யும் செயல்கள் தவறாகத்தானே முடியும்! இருந்தாலும் அவர் அசரமாட்டாராம். அதற்கும் ஒரு வெற்றி விழா எடுப்பாராம்! அவரே நன்றாக வேடம் பூண்டு கொண்டு, நான் யார் தெரியுமா இதனைச் சாதித்தேன்; அதனை வெட்டி வீழ்த்தினேன்; நான்தான் ‘ராஜாதி ராஜன்’ என்று வலம் வருவாராம்.
இருக்கத்தானே செய்கிறார்கள்! இவர்களை என்வென்று சொல்வது? திரு. புல்லறிவாளர் என்பதைத் தவிர!
“அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.” --- குறள் 846; அதிகாரம் – புல்லறிவாண்மை
அற்றம் = அழிவு, இறுதி, மானம் போகும் செயல்.
தம் வயின் குற்றம் மறையா வழி = தம்மிடம் உள்ள குற்றங்களைக் களையாமல், களைய முயலாமல்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு = தனக்கு ஏற்படப்போகும் அழிவை மறைக்க, மறக்க உடலுக்குப் புணுகு பூசி புத்தாடை பல அணிந்து வீணுக்கு வலம் வருவது புல்லறிவு.
தம்மிடம் உள்ள குற்றங்களைக் களையாமல், களைய முயலாமல் தனக்கு ஏற்படப்போகும் அழிவை மறைக்க, மறக்க உடலுக்குப் புனுகு பூசி புத்தாடை பல அணிந்து வீணுக்கு வலம் வருவது புல்லறிவு.
நாம் ஏற்கெனவே அறிவைக் குறித்து நம் பேராசான் சொன்னக் குறளைப் பல முறை சிந்தித்துள்ளோம். நாளும் நினைவில் வைக்க வேண்டிய குறள் அது. அதனால் மீண்டும் ஒரு மீள்வாசிப்பு செய்வதில் தவறில்லை. இதோ அந்தக் குறள்:
“அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்.” --- குறள் 421; அதிகாரம் – அறிவுடைமை
நல்ல அறிவு என்பது நம் அழிவினைத் தடுக்கும், காக்கும். அது எதிராளிகளாலும் நம்முள் புகுந்து நம்மை அழிக்க இயலாத வண்ணம் செயல்படும் ஒரு பாதுகாப்பு.
புண்ணுக்குத் தேவை புனுகல்ல; அதற்குத் தேவை சிகிச்சை!
புல்லறிவினை நீக்க நமக்குத் தேவை நல்லறிவு. தேடுவோம்! நாடுவோம் நல்லறிவினை!
அற்றம் மறைத்தலோ புல்லறிவு என்ற நம் பேராசான் அற்றம் மறைப்பது பெருமை என்றும் சொல்லியிருக்கிறார்! எங்கே, எப்போது?
நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments