top of page
Search

அற்றார்க்கு ஒன்று ... 1007, 226, 229, 1004, 22/05/2024

22/05/2024 (1173)

அன்பிற்கினியவர்களுக்கு:

ஈகை என்னும் அதிகாரத்திலிருந்து நாம் பார்த்துள்ள இரண்டு பாடல்களை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு நன்றியில் செல்வத்தைத் தொடர்வோம். காரணம் பின்னர் விளங்கும்.

 

காண்க 07/07/2021.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.  - 226; - ஈகை

 

ஏதுமில்லாமல் பசியால் வாடுபவர்களின் நல்ல பண்புகளையெல்லாம் அழிக்கும் பசியைப் போக்குதல்தான் பொருளைப் பெற்றவர்கள் செய்யவேண்டிய சேமிப்பு.

 

காண்க 12/07/2021(A)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமிய ருனல். - 229; அதிகாரம் - ஈகை

 

பிச்சை எடுப்பவனுக்கு ஏற்படுவதோ அந்த நேர இகழ்ச்சி மட்டுமே! கஞ்சனுக்கோ எப்போதும் இகழ்ச்சி!

 

நன்றியில் செல்வத்தில் அடுத்துவரும் பாடல் நம் புருவங்களைச் சற்று உயர்த்த வைக்கிறது. உரைகளோ மேலும் நம்மை ஆராயச் சொல்கின்றன.

 

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று. – 1007; - நன்றியில் செல்வம்

 

முதலில் அறிஞர் பெருமக்கள் சிலரின் உரைகளைப் பார்ப்போம்.

 

மூதறிஞர் மு. வரதராசனார்: பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

 

புலவர் புலியூர்க் கேசிகன்: ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.

 

அறிஞர் பெருமக்கள் பலரும் மேற்கண்டவாறே உரை காண்கிறார்கள்.

 

அஃதாவது, ஈயாதான் செல்வம் எப்படி பயனின்றி அழியுமோ, அதுபோன்றே தனியே மடியும் அழகிய பெண்களும் என்பதுபோல இருக்கின்றது அனைத்து உரைகளும்!

 

எனக்கு என்ன குழப்பம் என்றால் அழகிய பெண்கள் தனியாக வாழ்ந்து மூப்படைவது என்பது கொடுமையா? யாருக்குக் கொடுமை?

 

சரி, அந்தத் தனியாக இருக்கும் அழகியப் பெண்களுக்கும் “நாய் பெற்றத் தெங்கம் பழம்” போல இருக்கும் செல்வத்திற்கும் ஈடு வைப்பது எப்படிச் சரியாகும்?

 

அழகு என்பது உடலழகா? உள்ள அழகா?

 

நம் ஔவைப் பெருமாட்டி அழகானவரா? அழகில்லாதவரா? தனியாக இருந்தாரா? இல்லை யாரோடும் சேர்ந்து இருந்தாரா?

 

அது என்ன பெண்கள்? அதனினும் அழகிய பெண்கள்? ஏன் அப்படி? அப்போது, அழகில்லாப் பெண்கள் தனியாக வாழ்ந்து காலத்தைக் கழித்தால் பரவாயில்லையா?

 

ஆண்கள் தனியாக இருந்தால் பரவாயில்லையா? அழகான ஆண்கள்தாம் தனியாக இருக்கக் கூடாதா? இல்லை, ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?

 

ஆணுடன் சேர்ந்தால்தான் பெண்மைக்குப் பயன் இருக்குமா? இப்படித்தான் நம் பேராசான் சொல்ல முயன்றிருப்பாரா? இப்படிப் பல முடிச்சுகள் என் உள்ளத்தில் எழுகின்றன.

 

இது இருக்கட்டும். முதலில் அந்தக் குறளைப் பிரித்து எழுதிக் கொண்டு அதில் உள்ள சொல்களின் பொருள்களைப் பார்ப்போம்.

 

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள் மூத்து அற்று.

 

அற்றார்க்கு = இல்லாதவர்க்கு;  ஒன்று ஆற்றாதான் = ஒன்றும் உதவாதவன்; செல்வம் = பொருள்; மிக நலம் = மிக்க நன்மை; பெற்றாள் = பெற்றவள்; தமியள் = தனியாக இருப்பவள்; மூத்து அற்று= முதிர்ந்தது போல.

 

இல்லாதவர்க்கு ஒன்றும் உதவாதவனின் பொருள், மிக்க நன்மை பெற்றவள் தனியாக இருந்து முதிர்ந்தது போல!

 

பதம் பிரித்து அப்படியே பொருள் கொண்டால் அனைத்து உரைகளும் சரியானது போல இருக்கின்றது. என்றாலும், அந்தக் கருத்து நெருடலாகவே இருக்கின்றது! இதுதான் நம் பேராசான் சொல்ல முயலும் கருத்தாக இருக்குமா என்பது என் ஐயம்.

 

இந்த மடலின் தொடக்கத்தில் ஈகை அதிகாரத்திலிருந்து இரு பாடல்களைப் பார்த்தோமே அதைக் கவனியுங்கள்.

 

குறள் 226 இல் பொருள் என்று ஒருவர் வைத்திருந்தால் அற்றார்க்கு அழி பசி தீர்த்தல் கடமை என்றார். அதுவே அவர்க்கு அறச் சேமிப்பும் ஆகும் என்றார்.

 

குறள் 229 இல் பிச்சை எடுப்பது இழிவானது என்றால் அதனினும் இழிவானது சேர்த்து வைத்திருக்கும் பொருளை யார்க்கும் கொடுக்காமல் தாமே உண்டு மிதமுள்ளவற்றைப் பதுக்கி வைப்பது என்றார்.

 

தமி என்றால் தனிமை;

தமியன் / தமியள் / தமியர் என்றால் யாருடனும் ஒட்டாமல் தனியாக இருப்பவர்.

 

மேலும் குறள் 1004 இல், யாராலும் நச்சப் படாதவனின் எச்சம் என்று இந்த உலகில் ஏதும் இருக்காது என்றார். அஃதாவது, அவனோ அவளோ பயனற்றவர்கள். இந்தப் பூமிக்குப் பாரமானவர்கள் – waste pieces. காண்க 20/05/2024.

 

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன். – 1004; - நன்றியில் செல்வம்

 

மேற்கண்ட குறள்களைக் கொண்டு குறள் 1007 இனைப் பார்க்கலாம்.

 

சொல்களைக் கொஞ்சம் மாற்றிப் போட்டுக் கொள்வோம்! இதற்கு இலக்கணத்தில் கொண்டு கூட்டுப் பொருள்கோள் முறை என்பர். காண்க 09/10/2023. இஃது, நாம் பல குறள்களுக்குப் பயன்படுத்திய முறைதான்.

 

நலம் மிக பெற்றாள் அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் தமியள் மூத்தற்று

 

நலம் மிக = செல்வம் அதிகமாக; பெற்றாள் = பெற்றவர்; செல்வம் அற்றார்க்கு = பொருள் இல்லாதவர்க்கு;  ஒன்று ஆற்றாதான் = ஒன்றும் உதவாத காரணத்தான்; தமியள் மூத்தற்று= யாராலும் விரும்பப்படாமல் தனி ஆளாக இருந்து முதிர்ந்து உதிர வேண்டியதுதான்.

 

செல்வம் அதிகமாக பெற்றவர் பொருள் இல்லாதவர்க்கு ஒன்றும் உதவாத காரணத்தான் யாராலும் விரும்பப்படாமல் தனி ஆளாக இருந்து முதிர்ந்து உதிர வேண்டியதுதான்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிவிக்கவும்.

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
 

4 комментария


அருமையான விளக்கம். I agree with your thoughts.

Лайк
Ответ пользователю

நன்றி ஐயா

Лайк

அறிஞர் பெருமக்கள் உரை Bit shocking , I think Thiruvalluvar had used அழகிய பெண் only as a simile and not with the intention of portraying woman as a pleasure Object. What matters may be what women do from their young days to Old age days. ஔவை of Thiruvalluvar days and Mother Therasa...of our days...what is real beauty ..the SEVA they rendered to the society as a whole.

Лайк
Ответ пользователю

Thanks for the inputs sir. I fully agree.

Лайк
Post: Blog2_Post
bottom of page