21/09/2022 (570)
அவளின் முகத்தைக் கண்டு விண்மீன்களுக்கு குழப்பம் ஏற்பட்டு, இங்கும் அங்கும் அலைவதாக கற்பனை செய்த அவன் அந்த விண்மீன்களுக்குச் சொல்வது போல ஒரு குறள்.
“நிலவானது தேய்வதும், வளர்வதுமாக இருக்கிறது. மேலும், பார்த்தால் அந்த நிலவில் மறுக்கள் போல சில இருப்பதையும் காணமுடிகின்றது. இவ்வாறு இருக்கும் நிலவினை எப்படி என்னவளின் முகத்தோடு ஒப்பிட்டு குழப்பம் அடைகிறாய் நீ?”
“விண்மீனே உனக்கு சற்றும் அறிவில்லை!”
“என்னவளின் முகம் எப்போதும் ஒளி வீசும் மாசு மறுவற்ற முகம் தெரிந்துகொள்” என்கிறான்.
(நிலவானது தேய்வதுமில்லை, வளர்வதுமில்லை. எப்படி சூரியன் கிழக்கில் உதிப்பது இல்லையோ அதுபோல. சூரியனானது கிழக்கில் எழுவதுமில்லை, மேற்கில் மறைவதுமில்லை. இதுதான் அறிவியலில் உண்மையான உண்மை. இது நிற்க)
“அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.” --- குறள் 1117; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
நிலவு குறைந்தும், நிறைந்தும் ஒளிர்விடும். அது போன்ற குறைகள் என்னவளின் முகத்தில் இருக்கின்றனவா என்ன? இல்லையே!
வாய் = இடம்; அறு = குறைந்த; அவிர் = ஒளிர்;
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல = குறைந்தும், நிறைந்தும் ஒளிர்விடும் நிலவினைப்போல
மறுவுண்டோ மாதர் முகத்து = (அது போன்ற) குறைகள் என்னவளின் முகத்தில் இருக்கின்றனவா என்ன? (இல்லையே)
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments