12/01/2023 (679)
அரசன் அல்லது தலைவனின் செல்வங்களை அழிக்கும் படை எது தெரியுமா? என்று கேட்கிறார் நம் பேராசான்.
வேலில்லை; வாளில்லை; எதிர் நிற்கும் மாற்றார்களின் படையும் இல்லை!
பின் எது என்றால், தன் கீழ் இருக்கும் மக்களின் கண்ணீர் என்கிறார். அந்தக் கண்ணீருக்கு காரணம் அரசனாக, தலைவனாக இருந்தால் அவன் அரசும் அழியும்; அவனும் அழிவான் என்கிறார்.
குடி உயர கோல் உயரும் என்றால் குடி அழ கோல் அழியும்!
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.” ... குறள் 555; அதிகாரம் – கொடுங்கோன்மை
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே = குடிகளுக்கு நல்ல வகையில் உதவாமல், அவர்களை கசக்கிப் பிழியும் அரசின் செயல்களால் அவர்கள் விடும் கண்ணீர்தான்; செல்வத்தைத் தேய்க்கும் படை = அரசன் அல்லது தலைவனின் செல்வங்களை அழிக்கும் படை.
குடிகளுக்கு நல்ல வகையில் உதவாமல், அவர்களை கசக்கிப் பிழியும் அரசின் செயல்களால் அவர்கள் விடும் கண்ணீர்தான் அரசன் அல்லது தலைவனின் செல்வங்களை அழிக்கும் படை.
செல்வம் என்பது வெறும் பொருட்கள் மட்டுமல்ல புகழும்தான்! என்று அடுத்தக் குறளில் மேலும் தெளிவுபடுத்துகிறார்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments