top of page
Search

அழக்கொண்ட எல்லாம் ... 659, 660

27/04/2023 (784)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

வினைத்தூய்மை அதிகாரத்தின் ஏழாவது குறளில் பழியைத் தரும் தீயச் செயல்களைச் செய்து பெறும் ஆக்கத்தைவிட நல்குரவே நலம் என்றார். காண்க 26/04/2023.

அதனைத் தொடர்ந்து கடிந்த வினைகளைச் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் என்றார். காண்க 21/04/2023.


ஒருவரைக் கசக்கிப் பிழிந்து, கண்ணில் நீரை வரவைத்து, அடித்துப் பிடுங்கி பொருளினைச் சேர்ப்பது எல்லாம் நம்மை பின்னால் அழவைக்கும் என்கிறார். மாறாக, நல்லச் செயல்களைச் செய்வதன் மூலம் நாம் பொருள்களை இழந்தாலும் பின் நன்மை பயக்கும் என்கிறார்.


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.” --- குறள் 659; அதிகாரம் – வினைத்தூய்மை


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் = பிறரை அழ வைத்து தான் கொண்டப் பொருள்கள் பின்னர் அவரையே அழ வைத்துப் போய்விடும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் = பிறரை வஞ்சிக்காத நல்லச் செயல்களினால் நாம் ஒன்றை இழந்தாலும் பின்னாளில் நமக்குப் பயனையேத் தரும்.


பிறரை அழ வைத்து தான் கொண்டப் பொருள்கள் பின்னர் அவரையே அழ வைத்துப் போய்விடும்; பிறரை வஞ்சிக்காத நல்லச் செயல்களினால் நாம் ஒன்றை இழந்தாலும் பின்னாளில் அவை நமக்கு நல்லவைகளையேத் தரும்.


பின் பயக்கும் என்றதனால் நாம் மறைந்தப் பின்பும் நம் புகழ் இருக்கும் என்கிறார். வினைத்தூய்மையினால் மறுமையிலும் பயன் உண்டு என்றும் பொருள் சொல்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.


இந்த அதிகாரத்தின் முடிவுரையாக உள்ள குறளை நாம் முன்பே சில முறை சிந்தித்துள்ளோம். காண்க 28/07/2022 (517), 15/03/2023 (741). மீள்பார்வைக்காக


சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்து இரீஇ யற்று.” --- குறள் 660; அதிகாரம் – வினைத்தூய்மை


வஞ்சனையால் பொருளைச் சேர்த்து அதனைக் காப்பாற்றுதல் என்பது பச்சை மண்ணில் பானை செய்து அதனுள் நீரினை உற்றி காப்பாற்றுவது போலவாம்!

கடைசி நான்கு குறள்களின் மூலம் வினைத்தூய்மையை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு காரணங்களைச் சொல்லி நிறைவு செய்தார்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comentarios


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page