அழிவின் அவைநீக்கி ... குறள் 787
Updated: Dec 10, 2021
09/12/2021 (289)
நல்ல நட்புகளை வளர்ப்பது போல ஒரு அரிய செயல் இல்லை என்று குறள் 781ல் ஆரம்பித்த வள்ளுவப் பெருமான், அந்த நல்ல நட்புகள் நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் என்றும் பேதையர்கள் நட்பு நம்மை கொஞ்சமாக மங்க வைத்துவிடும் என்று சொல்லி அந்த இரண்டிற்கும் பொது உவமையாக பிறைமதியைக் குறிப்பிட்டார் குறள் 782ல், மேலும், நட்பு வளர, வளர இன்பம் பயக்கும் என்றும் அதுவும் எப்படி என்றால் (நவில் தொறும் நூல் நயம்)ஒரு நல்ல நூலைக் கற்க கற்க அது எப்படி புது புது அர்த்தங்களைக் காட்டி நம்மை இன்பமுறச் செய்யுமோ அது போல என்றார் குறள் 783ல்.
சரி, நகுதற் பொருட்டன்று நட்பு, நட்பு தவறு செய்யத் துணியும் போது இடித்துச் சொல்லித் தடுக்கவும் வேண்டும் என்றார் குறள் 784ல். கூடிக்களித்தால் தான் நட்பு என்பது இல்லை அது ஒத்த உணர்ச்சி சம்பந்தப் பட்டது என்பதை குறள் 785ல் புணர்ச்சி பழகுதல் வேண்டாம்; உணர்ச்சிதான் கிழமை தரும் என்றார்.
குறள் 786 ஒரு அருமையான குறள்(இங்கே காண்க). நாம் ஏற்கனவே பார்த்ததுதான். முகம் நக நட்பது நட்பு அல்ல, நெஞ்சத்து அகம் மலரச் செய்வதுதான் நட்பு என்று மேலும் சொன்னார். அந்த குறளைப் பார்த்தபோது எண் 786க் குறித்தும் பார்த்தோம்.
சரி, இடித்துச் சொல்லியாகி விட்டது, தடுத்தும் பார்த்தாகி விட்டது. நண்பனும் முயன்று விட்டான். ஆனால் அதையும் மீறி சில சமயம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறது நட்பு என்றால் என்ன செய்ய வேண்டும்? நீயாச்சு, உன் தலையெழுத்தாச்சு நடப்பது நடக்கட்டும் என்று நகர்ந்து விடுவதா?
அதுதான் இல்லையாம். அவன் துன்பத்திலும், துயரத்திலும் துணையாக இருப்பதுதான் நட்பாம்.
“அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.” --- குறள் 787; அதிகாரம் - நட்பு
அழிவின் அவை நீக்கி = துண்பங்களைத்தரும் தீ நெறிகளில் செல்லும் போது விலக்கி; ஆறு உய்த்து = நல்ல நெறிகளில் செல்லுமாறு செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு = (அதையும் மீறி) நண்பன் துண்பப்படும்போது அவனுக்கு ஆதரவாக உடன் இருப்பதே நட்பு
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.” --- மூதுரை 17; ஔவையார்
குளத்தில் நீர் இருக்கும்வரை பல இடத்திலிருந்தும் பறவைகள் வந்து தங்கும். நீர் வற்ற அப்பறவைகள் வேறிடம் செல்லும். ஆனால், அக்குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற தாவரங்கள் எப்போதும் உடன் இருக்கும் என்கிறார் ஔவையார் பெருந்தகை. உவமையாகத்தான் சொல்லியிருக்கிறார். உவமைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கக்கூடாது என்று ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
