top of page
Search

அவ்விய அரும்செவ்வி ... 169, 565

23/01/2023 (690)

ஒரு புதிர்: “It அது but ஆனால் that அது what என்ன?

பதில்: Meaning பொருள்”

--- இந்தப் புதிரை என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அக்காலத்தில், ஆங்கிலச்சொல்லுக்கு தமிழ் வார்த்தைகளை மனனம் செய்ய பயன்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


ஆக, பொருள் என்றால் meaning என்று பொருள்!


அரும்பொருள் என்றால்? காணக்கிடைக்காத பொருள், அரிய பொருள்.


‘அரும்பொருள் விளக்க நிகண்டு’ என்று ஒரு நூல் தமிழில் இருக்கிறது, அதை இயற்றியவர் அருமருந்தைய தேசிகர். நிகண்டு என்றால் கிட்டத்தட்ட அகராதி, (Dictionary) என்று சொல்லலாம். சொற்களுக்கு பல வகையில் பொருள் சொல்வது,


‘அவ்விய’ என்றால் அழுகிய, பொறாமை கொண்ட என்று பொருள். ‘அழுக்காறாமை’ என்ற 17ஆவது அதிகாரத்தில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல். அழுக்காறாமை என்றால் பொறாமையைச் செய்யாமை.


இந்த உலகத்தில் நல்லவர்கள் வாடுவதும், கெட்டவர்கள் செழிப்பாக இருப்பதும் அதிசயம்தான். அது ஆராயத்தக்கதும்கூட! நான் சொல்லவில்லை; நம் பேராசான் சொல்கிறார்.


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்” --- குறள் 169; அதிகாரம் – அழுக்காறாமை


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் = அழுகிப்போன, பொறாமை கொண்டவனின் வளர்ச்சியும்; செவ்வியான் கேடும் நினைக்கப்படும் = நேர்மையானவனின் அழிவும் ஆராயப்படும்.


அழுகிப்போன பொறாமை கொண்டவனின் வளர்ச்சியும்; நேர்மையானவனின் அழிவும் ஆராயப்படும்.


இது எதனால் என்றால், பொறாமைகொண்டவன் கடைசியில் அழிவான் என்பதும், நேர்மையானவன் இறுதியில் வெல்வான் என்பதாலும் “அப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான்” என்று மக்கள் ஆராய்வர்.


சரி, நாம் வெருவந்த செய்யாமையில் தானே இருந்தோம். இது என்ன இடையிலே? என்று கேட்கிறீர்கள். உண்மைதான்.


“அரும்செவ்வி” என்ற சொல்லின் பொருளைத் தேடப் போக எழுந்த சிந்தனைதான் மேலே கண்டது!


‘செவ்வி’ என்ற சொல்லுக்கு வளமை, நேர்மை, அழகு, காலம் இப்படி பல பொருள்கள் இருக்கின்றன.


‘அரும்செவ்வி’ என்றால் ‘நேர்மையற்ற’, ‘காண்பதற்கு அரியவனாய்’ என்று பொருள்.


“பூதம் காக்கும் புதையல்”; “நாய் உருட்டியத் தெங்கம்பழம்” போன்ற பழமொழிகள் நமக்குத் தெரியும். அதாவது, அந்தப் புதையலாலும், தேங்காயாலும் யாருக்கும் பயன் இராது!


இந்தப் பழமொழிகளைப் பயன்படுத்தி இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது வரும் குறளில்.


அரும்செவ்வி இன்னா முகத்தான் பெரும்செல்வம்

பேஎய்கண் டன்ன துடைத்து.” --- குறள் 565; அதிகாரம் – வெருவந்த செய்யாமை


அரும் செவ்வி = நேர்மையற்றவன், மக்களால் அனுக முடியாதவன், அச்சப் படும்படி இருப்பவன்; இன்னா முகத்தான் = கடு கடு என்று இருப்பவன்;

பெரும்செல்வம் = (அப்படி இருப்பவனின்) பெரும் செல்வம்; பே(எ)ய் கண்டது அன்ன உடைத்து = பூதம் காத்தப் புதையலை ஒக்கும்


நேர்மையற்றவன், மக்களால் அனுக முடியாதவன், அச்சப் படும்படி இருப்பவன்; கடு கடு என்று இருப்பவனின் பெரும் செல்வம் பூதம் காத்தப் புதையலை போன்றது. யாருக்கும் பயன்படாது.


‘யாருக்கும்’ என்றால் அவனுக்குமே அது பயன்படாமல் போகும்.


பி.கு: ஒவ்வொரு குறளுக்கும் பொருள் தேடத் தேட வற்றாத புதையல்கள் கிடைக்கின்றன. சும்மாவா சொன்னார்கள்: “கடுகைத் துளைத்து எழுகடலை புகுத்தினார்” நம் பேராசான் என்று!


இதுவரை நீங்கள் படித்துக் கொண்டிருந்தால் உங்கள் பொறுமை கடலினும் பெரிது!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )





Comments


Post: Blog2_Post
bottom of page