20/02/2023 (718)
ஊக்கம் இருந்தால் துன்பம் வராது என்றார் (குறள் 593ல்). அது எப்படி இயலும் என்பதை விரிக்கிறார் அடுத்தக் குறளில்.
‘அதர்’ என்றால் இயற்கையாக உருவாகும் வழி (nature’s path) என்று பொருள். அதர் என்பதற்கு வேறொரு பொருள் சக்கை அல்லது உமி.
“ஆனினம் கலித்த அதர் பல கடந்து
மானினம் கலித்த மலை பின் ஒழிய,
மீனினம் கலித்த துறை பல நீந்தி,
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! ...” --- புறநானூறு பாடல் - 138
பசுக்கள் மேயும் வழியைக் கடந்தும், மானினம் மேயும் மலைப்பகுதியைக் கடந்தும், மீனினம் நிறைந்துள்ள நீர் நிலைகளக் கடந்தும், பொருள் வேண்டி, யாழினை இசைத்துக் கொண்டு, கிழிந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு வரும் முதிய பாணனே ... நீ வருந்த வேண்டாம், இவ்வரசன் உன் கவலை தீர்ப்பான் என்று பொருள்படும்படி அமைந்தப் பாடல் இது.
நாம் கவனிக்க வேண்டியது ‘அதர்’ என்னும் சொல்லை! அதர் என்றால் வழி; அதுவும் இயற்கையாக உருவாகிய வழி.
சரி, இப்போது இந்த ‘அதர்’ கதை எதற்கு என்கிறீர்களா? இருக்கு ஒரு செய்தி. இந்த ‘அதர்’ என்னும் சொல்லை நம் பேராசான் பயன்படுத்துகிறார். அதுவும், திருக்குறளில் ஒரேஒரு முறைதான் பயன்படுத்தியுள்ளார்!
எதற்கு?
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் என்கிறார். அதாவது, செல்வங்கள் பாதையை உருவாக்கிக் கொண்டு செல்லுமாம்.
எங்கே அது நடக்குமாம்?
ஊக்கம் உடையவனிடம்!
அதுவும் எப்படிப்பட்ட ஊக்கம்?
அசைவிலா ஊக்கம்.
அதாவது, தளர்வில்லாத ஊக்கம், சோர்வில்லாத ஊக்கம் உடையவனிடம் வளங்கள் வழியை உருவாக்கிக் கொண்டு தானே செல்லுமாம்!
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.” --- குறள் 594; அதிகாரம் – ஊக்கம் உடைமை
உழை = இடம்; அசைவிலா ஊக்கம் உடையான் உழை = தளர்வில்லாத ஊக்கம் உடையவனிடம்; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் = செல்வம் தானே வழியை உருவாக்கிக் கொண்டு செல்லும்.
தளர்வில்லாத ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வழியை உருவாக்கிக் கொண்டு செல்லும்.
இதைச் சுருக்கி “ஊக்கமது கைவிடேல்” என்றார் நம் ஔவை பெருந்தகை ஆத்திச்சூடியில்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments