ஆபயன் குன்றும் ... 560
18/01/2023 (685)
18/01/2021ல் தொடங்கிய இந்தத் தொடர், உங்கள் அனைவரின் நல் ஆதரவுடன் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அனைவருக்கும் எனது நன்றிகள் பல.
இது நிற்க.
கொடுங்கோன்மை அதிகாரத்தின் இறுதிக் குறளுக்கு வந்துவிட்டோம். முடிவுரையாக என்ன சொல்லப் போகிறார் நம் பேராசான்?
இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்கள் பல வகையில் உரை கண்டுள்ளார்கள். அதிகாரத்தலைப்பை மனதில் கொண்டு உரை கண்டால் சற்று எளிதாக இருக்கும்.
கொடுங்கோன்மை என்பதை நமது மகாகவி பாரதியின் வரிகளில் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி சொல்வது:
“...சாலநன்கு கூறினீர் ஐயா, தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
“தக்கதுநீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும்” எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர்! பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்.”
அரசே மக்களை போதையில் ஆழ்த்தும்; சூதாடத் தூண்டும்! அதுவும் சரியென்று கற்றறிந்தோர் கைத்தட்டி ஊக்கப் படுத்துவர்!
அதாவது நீதிமான்கள் தான் கற்ற நீதி நூற்களை புறந்தள்ளிவிட்டு ஆட்சி செய்வோர்களுக்கு முட்டு கொடுத்து கொடுங்கோன்மைக்குத் துணை நிற்பர்!
பேய்கள் அரசு செய்தால் பிணம் தீன்னும் சாத்திரங்கள்!
மக்கள் வளம் பெருக்க முயலாது மயக்கத்தில் ஆழ்த்துவதும் சூதினை ஊக்கப் படுத்துவதும் எத்தகைய ஆட்சி முறை? இது நிற்க.
பெரும்பான்மை கருதி, கொடுங்கோன்மையால் இரண்டு குற்றங்கள் நிகழும் என்கிறார். என்னென்ன நிகழுமாம்?
ஆபயன் குன்றும்; அறு தொழிலோர் நூல் மறப்பர் என்கிறார்.
ஆபயன் குன்றும் என்றால் என்ன?
ஆ என்றால் பசு. பசு என்பது உயிர்களுக்கு குறியீடு. பசுக்களின் பயன் குன்றும் என்றால் உயிர்களால் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பயன்கள் குன்றும். இதை Resources என்று எடுத்துக் கொள்ளலாம். Resources என்பது இருவகை; 1. Natural Resources (இயற்கை வளம்); 2. Human Resources (மனித வளம்). இரண்டும் வீணாக்கப்படும் அல்லது அழிக்கப்படும்!
அறுதொழில் செய்வோர் அவர்கள் கற்றதை மறந்தால் என்ன ஆகும்?
அறு தொழில் என்பது அறுவடைத் தொழிலைக் குறிக்கும். அறுவடை(பெயர்ச்சொல்) என்பதன் பொருள் விளைபொருள். அறுவடை என்ற சொல்லுக்கு பொதுப்பட பொருள் என்னவென்றால் Production (உற்பத்தி). உற்பத்தி குறையும். அது குறைந்தால் என்ன ஆகும்? GDP (Gross Domestic Product – மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீடு) குறையும்! குறைந்தால் என்ன ஆகும்? மக்கள் வறுமைக்குத் தள்ளப் படுவார்கள்.
இது நிற்க. நாம் குறளினைப் பார்க்கலாம்.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.” --- குறள் 560; அதிகாரம் – கொடுங்கோன்மை
காவலன் காவான் எனின் = ஆட்சியாளர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால்;
ஆபயன் குன்றும் = உயிர்களின் மூலமாக கிடைக்க வேண்டிய வளங்கள் வீணாக்கப்படும், குறையும்; அறுதொழிலோர் நூல்மறப்பர் =; உற்பத்தி செய்யக் கூடிய மக்கள் தான் கற்று அறிந்ததை மறந்து வீணே இருப்பர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
