14/07/2022 (503)
நேற்று நாம் கண்ட அருளாளர்களின் பாடல்கள் மூலம் குலம் பிறப்பால் வருவதில்லை. பின்னால் ஏற்படுத்திக் கொள்வது, இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலரும் குழம்புவது பெரிய அளவில் உள்ளது.
வில்லி பாரதத்தில் இருந்து:
வில் பயிற்சிகள் முடிந்து தனது சீடர்களின் திறமைகளை உலகுக்கு உணர்த்த வில் போட்டி ஏற்பாடு செய்கிறார் துரோணாச்சாரியார். அர்ச்சுனன் அனைவரையும் அசத்துகிறான். துரோணாசாரியார் “வில்லுக்கு விஜயன்” என்று மனம் குளிர்கிறார்.
அப்போது அந்த அரங்கத்தில் சல சலப்பு. கர்ணன் எழுகிறான். இதோ பாருங்கள், என் திறமையை என்று பலவாறு தான் பரசுராமரிடம் பயின்ற வித்தைகளைக் காட்டுகிறான். அர்சுனனுக்கு எப்படி இது நிகழலாம் என்ற கேள்வி. துரோணர் ஆச்சரியப் படுகிறார். கர்ணனின் வில் திறத்தை சொல்லும்போது வில்லிப்புத்துரார் “இணை இல் வீரன்” என்கிறார்.
கர்ணன், அர்ச்சுனனை வில் போருக்கு அழைக்கிறான். “வா, நீயும் நானும் மோதலாம்” என்கிறான். சபை திடுக்கிடுகிறது. அர்ச்சுனன் திடுக்கிட்டு நீ எனக்கு சமமானவன் இல்லை. என்னை போருக்கு அழைக்க உனக்கு என்ன தகுதி என்று கேட்கிறான்.
கர்ணன் வெகுண்டெழுகிறான். “முணைந்த போரில் முடி துணிப்பேன்” என்கிறான். அதாவது, சண்டைக்கு வா, உன் தலையை சீவிடறேன் என்கிறான்.
அப்போது, கிருபாச்சாரியர் எழுந்து கர்ணனைப் பார்த்து, “இவனோ நாதன் மைந்தன், நீயோ சூதன் மைந்தன் …”
“ஓஓ உனக்குத்தான் தெரியாதே நாதன் மைந்தன் என்றால். இவன் கடல் சூழ்ந்த பூமிக்கு அரசனாக இருக்கின்றவனின் மைந்தன், நீயோ, நீயோ சூதன் அதாவது தேரோட்டியின் மைந்தன். (அதாவது நீ அந்த சாதி என்பதைக் குறிக்கிறார்). நீ எப்படி அவனுக்கு எதிர் நிற்கலாம்?”
எந்தச் சொல்லம்பு விட்டால் கர்ணன் தலை தாழுமோ அந்த அம்பை விடுகிறார். ஆடிப்போகிறான் கர்ணன்.
அப்போது எழுகிறான் துரியோதனன்.
கிருபாசாரியாரே என்ன சொன்னீர்? நீர் எங்களுக்கு கற்றுத் தந்ததை மறந்துவீட்டீரா? இருக்கலாம், இதோ உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
ஆறு பேருக்கு சாதி பேதம் கிடையாது என்றீரே அடிகளாரே! அவர்கள் யார், யார் என்று நீதி நூல்களில் உள்ளதைப் பட்டியலிட்டீரே. கேளுங்கள்.
கற்றவர்க்கு, குணம் நிறைந்த பெண்களுக்கு, கொடுத்து சிவக்கும் கைகள் உடைய வள்ளல்களூக்கு, அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரர்களுக்கு, சிறப்பாக ஆட்சி செய்யும் அரசர்களுக்கு, குற்றமில்லாத ஞானியர்களுக்கு ஒரே சாதி தான். அதில் உயர்வு, தாழ்வு இல்லை.
“கற்றவர்க்கு நலன் நிறைந்த கன்னியர்க்கு வண்மை கை
உற்றவர்க்கும் வீரனென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்
கொற்றவர்க்கும் உண்மையான கோதின் ஞான சரிதராம்
நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமையில்லையால்.” --- பாடல் – 68, வாரணாவதச் சருக்கம், ஆதி பருவம், வில்லி பாரதம்
கோதின் = கோதில் = கோது + இல் = குற்றமற்ற
விற்போரிலே, கிருபாச்சாரியாரே, தேவையானது விரம் தானே? இங்கே எங்கே சாதி வந்தது? என்றான் துரியோதனன்.
கிருபாச்சாரியார் ஏளனமான ஒரு சிரிப்போடு கேட்டார். அப்போது “அவனின் பிறப்பு?”
“பெட்டி”யை கவனமூட்டுகிறார் கிருபச்சாரியார். பிறப்பறியா அனாதை என்று ஏளனப் படுத்துகிறார்.
கொதிக்கிறான் துரியோதனன். கர்ணன் ஒடுங்கிப் போகிறான்.
அடிகளே (கிருபாசாரியாரே), நீர் எல்லாவற்றையும் மறந்துவிட்டீரா என்ன?
வில்லிப்புத்தூராரின் மொழிகளில் துரியோதனன் மீண்டும் ஆர்பரிக்கிறான்…
… நாளை தொடரலாம் என்றார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments