top of page
Search

ஆற்றின் அளவறிந்து கற்க ...

Writer: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

06/06/2023 (824)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஒரு மொழியை எவ்வாறு கற்க வேண்டும் என்பதைக் குறித்து நாம் முன்பு ஒருமுறை சிந்தித்துள்ளோம். காண்க 11/08/2021 (169). மீள்பார்வைக்காக:


முதலில் அகராதி, அதன் பின் தருக்கம், அதற்குப் பிறகுதான் இலக்கணம், இலக்கியம் … இதுதான் கற்கும் வழி முறை. இது நிற்க.


இதில் தருக்கம் என்பது அளவை என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் இதனை logic என்று அழைப்பார்கள். “என்னப்பா, இவர் லாஜிக்கே இல்லாமல் பேசுகிறாரே?” என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுதான் அளவை.


அதாவது, ஒருவர் பேசுவதன் உண்மைத் தன்மையை நாம் அந்த அளவையைக் கொண்டுதான் அளப்போம். இதற்கு அளவையியல் அல்லது தருக்கவியல் என்று பெயர்.


அதேபோல், நாம் பேசும் போதும் அதே அளவை (logic) முக்கியம் இல்லையா?

Logic என்பது logos என்ற கிரேக்கச் சொல்லை அடிச்சொல்லாகக் கொண்டது. Logic என்பது நமது சிந்தனையையும் அதை வெளிப்படுத்தும் மொழியினையும் குறிக்கும்.


“Logy” என்றால் நன்கு சிந்தித்துப் படிப்பது. Biology என்றால் உயிரிணங்களைப் படிப்பது. Psych என்றால் ஆன்மா. சைக் (Psych) என்பது சைக்கே என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. ஆன்மாவைப் படிப்பது சைக்காலஜி.


ஆன்மா என்பது வேறொன்றுமல்ல, அதுதான் மனசாட்சி. அதனால்தான், Psychologyயை உளவியல் என்கிறார்கள்.


சரி, ஏன் இப்படி அளக்கிறாய் என்றுதானே கேட்கிறீர்கள். என்ன செய்ய, ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அளவறிந்து (logic அறிந்து) கற்க என்கிறார் நம் பேராசான். அதனால்தான் இந்த அளப்பு!


ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றம் கொடுத்தற் பொருட்டு.” --- குறள் 725; அதிகாரம் – அவையஞ்சாமை


அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு ஆற்றின்= அவையின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சாமல் பதில் தரும் விதத்தில் இணையாகப் பேச வேண்டும் என்றால்; அளவறிந்து கற்க = அளவை (தருக்கம்) அறிந்து கற்க.


அவையின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சாமல், பதில் தரும் விதத்தில், இணையாகப் பேச வேண்டும் என்றால், அளவை (தருக்கம்) அறிந்து கற்க.


அதாங்க அளவையைப் (லாஜிக்கைப்) படித்து, பிடித்துப் பேசுங்க. அப்போது உங்களுக்கு பயம் இருக்காது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page