23/11/2022 (629)
முதல் குறளில் (491) நல்ல இடம் கிடைக்காதவரை தொடங்கற்க எவ்வினையும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, முரண் சேர்ந்த மொய்ம்பினவர் என்றார் குறள் 492ல். அதாவது, மாறுபட்ட திறம் உடையவரும் வென்றுவிடலாம் நல்லதொரு பாதுகாப்பான இடம் அமைந்துவிட்டால் என்றார்.
அதை ஒட்டி, வலிமையே இல்லாமல் இருப்பவரும் வெல்லலாம் என்கிறார் வருகின்ற குறளில்.
அது எப்படி என்றால் எல்லாமல் ‘இடம்’தான். “இடத்தை தக்க வைத்துக் கொண்டால் மடத்தை பிடித்து விடலாம்” என்கிறார்.
“ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.” --- குறள் 493; அதிகாரம் – இடனறிதல்
ஆற்றார் = வலிமையில்லாதவர்; ஆற்றி அடுப = வலிமையுடையவர் போல வெல்வர்; இடன் அறிந்து = இடத்தினை அறிந்து; போற்றார்கண் = மாற்றார் அல்லது பகைவர்; போற்றிச் செயின் = நமது இடத்தை பாதுகாப்பனதாக செய்து கொண்டு வென்றுவிடலாம்.
‘போற்றார்கண் போற்றிச் செயின்’ என்பதை இடத்தினைப்/இருப்பினைப் போற்றாமல் இருக்கும் மாற்றாரை சும்மா தூக்கிப் பேசியே கவிழ்த்துவிடலாம்! என்றும் பொருள் எடுக்கலாம்.
Mike Tyson (மைக் டைசன்) என்று ஒரு அமெரிக்க குத்துச் சண்டை வீரர் இருக்கிறார். 1966ல் பிறந்தவர். 1984 ல் இருந்து அவர் புகழ் ஓங்கி இருந்தது. 1990 துவக்கத்தில், அவரின் சொத்து மதிப்பு கிட்ட த்தட்ட தற்போதைய மதிப்பில் ரூபாய் 5000 கோடி (ஆம்மாடியோவ்). குத்தி, குத்தியே குமிக்கியிருக்கிறார்.
ஆனால், என்ன ஆயிற்று என்றால் 2003 ல் அவர் bankruptcy கொடுத்தார். அதாவது மஞ்சள் நோட்டீஸ் (என்னிடம் பணம் இல்லை; நான் போண்டியாகி விட்டேன் என்பதை அரசுக்குத் தெரிவித்து பாதுகாப்பு கோருவது). எப்படி இது போல் ஆகியது?
இருப்பினை அதாவது இருக்கும் இடத்தினைப் போற்றாத் தகுதியால் விளைந்தது. யாரும் அவரிடமிருந்து கொள்ளையடிக்கலை. அவராகவே வாரி இறைத்து வழுக்கி விழுந்தார்.
அவரின் வாழ்க்கைக்கு வேண்டிய அரணை அவர் செய்து கொள்ளவில்லை!
“புன்ணியவசத்தல் பொருளது வர வேண்டும் – வந்தப் பொருளை
காத்து இரட்ச்சிக்க வேண்டும்.” என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இறைத்து விட்டால் இன்னல்தான்!
இடத்தினை, இருப்பினைப் போற்றுவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
留言