18/04/2022 (416)
ஐ அழகா இருக்கே! ன்னு சொல்கிறோமில்லையா? அந்த ‘ஐ’ க்கு பொருள் எதாவது உண்டா? ஐ என்றால் வியப்பு அதான் தெரியுமே என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்க.
அது மட்டுமல்ல, ‘ஐ’ க்கு பல பொருள் இருக்காம். ‘அழகு’, ‘நுட்பம்’, இறை, தலைவன், தந்தை, ஐந்து என்று பல பொருளில் பயின்று வருமாம்.
தமிழிலேதான் அதிக அளவில் ஓரெழுத்து சொற்கள் இருக்காம். மொத்தம் 52ன்னு பட்டியல் படுத்துகிறார்கள். இது தமிழுக்கு ஒரு சிறப்பு, தமிழின் தொன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
‘தா’ என்றால் கொடு, கேட்பது என்று தெரியும். ‘தா’ என்றால் ‘கொடுமை’ன்னு ஒரு பொருள் இருக்கு தெரியுமோ?
‘தா’ என்றால் கேடு என்றும் பொருள்படுமாம். தாவில் (தா+இல்) என்றால் கேடு இல்லாத, குற்றமில்லாத என்று பொருள்.
“தவல்” என்றால் கெடுதல், அழிதல்.
‘விளக்கம்’ என்ற சொல்லுக்கு தெளிவாக இல்லாதவற்றை தெளிவாக்குவது, விரித்துச் சொல்வது என்பது வழக்கமான பொருள். விளக்கம் என்றால் ஒளி, வெளிச்சம், புகழ் என்ற பொருளும் இருக்காம்.
‘எவ்வம்’ என்றால் துன்பம், அதுவும் எல்லையில்லா துன்பம் என்று பொருள். நாம ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க: 02/07/2021 (130). மீள்பார்வைக்காக:
“இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.” --- குறள் 223; அதிகாரம் - ஈதல்
என்னிடம் ஒன்றும் இல்லை என்று தன் துன்பத்தை சொல்லி இரப்பவரிடம் அதே கதைதான் இங்கேயும் என்று சொல்லாமை, இரப்பவன் தன் துன்பத்தை சொன்ன மாத்திரத்தில் அவனுக்கு வேண்டிய உதவியை தாராளமாக செய்தலும், நல்ல குடிபிறந்தானிடம் இருக்கும்.
எவ்வநோய் என்றால் தீரா வியாதி. தொழுநோய் போல என்று சொல்கிறார்கள்.
சரி, என்ன இன்றைக்கு சொல்லதிகாரமா இருக்குன்னு நினக்கறீங்களா? காரணமிருக்கு. இப்போ பார்க்கப் போகிற குறள் அப்படி.
“இகல்என்னும் எவ்வநோய்நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்.” --- குறள் 853; அதிகாரம் – இகல்
இகல்என்னும் எவ்வநோய்நீக்கின் = மாறுபாடு என்னும் கொடிய நோயை மனதிலிருந்து நீக்கிவிட்டால்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் = என்றைக்கும் அழிவில்லாத குற்றமுமில்லா புகழைத்தரும்.
‘மாறுபாடுக்கு இடம் கொடுக்கா மனமிருந்தால் நீங்கா புகழ் கிடைக்கும்’ என்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments