20/04/2022 (418)
இகல் என்ற அதிகாரம் பொருட்பாலில், அங்கவியலில் அமைந்துள்ள அதிகாரம். அனவருக்குமே பொருந்தும் என்றாலும், அரசர்களுக்கு, தலைவர்களுக்கு கூறப்பட்ட குறள்கள் அவை.
இந்த அதிகாரத்தின் அடிநாதமே, “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப்போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை.” என்பதுதான்.
வளைந்து கொடுப்பதும், நெகிழ்ந்து கொடுப்பதும் உறவுகளுக்குள் அவசியம்.
ஒரு சிறு இடத்தை விட்டுக் கொடுத்திருந்தால் மகாபாரதப் போர் தவிர்க்கப் பட்டிருக்கும்.
விட்டுக் கொடுக்க மனமில்லாமல் வீணாகப் போகிறவர்கள் ஏராளாம்.
ஆங்காரத்தை உள்ளடக்க முடியாமல் போவதன் விளைவுதான் அது. அது ஒரு விரைவுப் பாதை (express way). நிதானிப்பதற்குள் நிண்ட தூரம் பயனப் பட்டிருப்போம். அப் பாதையில் பயனிக்கத்தொடங்கினால் திரும்புவது மிகவும் கடினம். Point of no return (திரும்ப இயலாப் புள்ளி) என்று சொல்கிறார்களே அதுதான் அது.
ஏதோ ஒரு வேகம் சார், நான் அந்த மாதிரி பண்ணிட்டேன் என்று வாழ்நாள் முழுவதும் வருந்துபவர்கள் ஏராளம்.
இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல துறந்தவர்களுக்கும் இச்சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.
மெய்ஞானப் புலம்பலில் பத்திரகிரிப் பெருமான் முதல் அடிகளாக இப்படித்தான் ஆரம்பிக்கிறார்:
“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்”
ஆங்காரத்தை உள்ளே அடக்கனுமாம். அது எப்படி முடியும் என்றால் ஐம்புலனைச் சுட்டு அப்புறம் அறுக்கனுமாம். அதாவது, இந்த புற்று நோய்க்கு பல விதமாக அந்தக் கட்டிகளைக் கருக்கி, சுட்டு அதை நீக்குகிறார்களே அது போல. புலன்கள் சாதாரணமாக கட்டுப்படாதாம். அதற்கு பயிற்சி பண்ணனும் என்கிறார். இது நிற்க.
இகல் எதிரே வந்தால் கொஞ்சம் சாய்ந்து கடந்துவிட்டால் நம்மை கவிழ்க்க யாராலும் இயலாது என்கிறார் நம் பேராசான்.
“இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.” --- குறள் 855; அதிகாரம் – இகல்
இகல் எதிர் சாய்ந்து ஓழுக வல்லாரை = மாறுபாடு/பகை நம்மை நோக்கி வரும் போது அதற்கு எதிர்வினை ஆற்றாது சாய்ந்து (அதாங்க சென்னைத்தமிழில் டபாய்க்கறது) கொடுக்கும் வல்லமை உடையவர்களை; மிகல் = மிஞ்சுவது, சாய்ப்பது, கவிழ்ப்பது, வெல்வது; மிகல் ஊக்கும் தன்மையவர் யார்? = சாய்க்க நினைப்பவர்கள் யார்? யாராலும் இயலாது
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments