இகலானாம் இன்னாத எல்லாம் ... குறள் 860
26/04/2022 (424)
என் நண்பர் திரு கோட்டீஸ்வரன் அவர்கள், விதியைப் பற்றி இரு உதாரணங்களைப் பின்னூட்டமாக போட்டு இருக்கார்.
“நம்ம உடலின் உயரம் இவ்வளவுதான் என்பது நம் கையிலே இல்லை. இருந்தாலும் நம்ம எடை (weight) இவ்வளவுதான் இருக்கனும் என்பது நம்ம கையிலே இருக்கு!”
“மழை வருவதும், வராததும் நாம கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நிச்சயமாக குடை எடுத்துப் போவதும் போகாததும் நம்மக்கிட்டதான் இருக்கு!”
அருமையான உதாரணங்கள். இது நிற்க.
இகலில் கடைசிக் குறளுக்கு வந்து விட்டோம். முடிவுரையாக ஒரு குறளைச் சொல்லப் போகிறார்.
முன்னாடி சொன்ன எல்லாவற்றையும் நீங்க மறந்து விட்டாலும்கூட இதை மட்டும் கவனம் வைத்துக் கொள்ளுங்கள் என்று நம்பேராசான் அறிவுறுத்துவது போல இருக்கு.
இகல் என்றால் துன்பம்; நட்பு என்றால் இன்பம் அவ்வளவுதான். இதைவிட எளிமையாகச் சொல்லமுடியுமா?
“இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.” --- குறள் 860; அதிகாரம் – இகல்
நகல் = சிரித்தல், சிரித்து மகிழும் நட்புக்கு ஆகியுள்ளது, மாறுபாடின்மை; நன்னயம் = சிறந்த மேன்மை, நல் வழி; செருக்கு = பெருமை;
இகலானாம் இன்னாத எல்லாம் = இகலால் துன்பங்கள் எல்லாம் வரும்;
நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு = நட்பினால் உயர்வு எனும் பெருமை வரும்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
