21/04/2022 (419)
இகல் அதிகாரத்தில் 852 தொடங்கி 855 வரை, நான்கு குறள்கள் மூலம் இகலைத் தவிர்த்தலால் வரும் நன்மை கூறினார்.
அடுத்து வரும் இருகுறள்கள் மூலம் இகலினால் வரும் தீமை கூறப் போகிறார்.
அதற்கு முன்:
விவேக சிந்தாமணி என்ற நூலின் காலம் தெரியவில்லை. இயற்றியவர்கள் பலராக இருக்கலாம் என்று அறிஞர் பெருமக்கள் கருதுகிறார்கள். இதில் 137 பாடல்கள் உள்ளன என்று ஒரு பதிப்பின் மூலம் அறியப்படுகிறது.
கற்பனைவளமும் கருத்துச் செறிவும் அடங்கிய பாடல்கள் ஏராளாமாக உள்ள ஒரு தனிப்பாடல் தொகுப்பு இது. அந்தக் காலத்தில் (~1912) பள்ளியில் இது பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் சில பாடல்கள் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கின்றன என்கிறார்கள்.
என்னுடைய தாத்தா சேர்த்து வைத்திருந்த புத்தகங்களில் எனக்கு கிடைத்த சிலவற்றில் இதுவும் ஒன்று.
இதில் இருக்கும் “அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த …” என்று தொடங்கும் கடவுள் வாழ்த்துப்பாடல் பலரும் அறிந்ததே.
முதல் பாடலில் பயனில்லாத ஏழினை வரிசைப் படுத்தியிருக்கிறார் அப்பாடல் ஆசிரியர்.
“ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம், பயனில்லை ஏழும்தானே.” --- பாடல் 1; விவேக சிந்தாமணி
கோபத்தை அடக்காதவனால் பயனில்லை (USELESS) என்பதுதான் வரும் இருகுறள்களின் கருத்து.
‘இகல்’தான் கெத்து என்று மாறுபட்டு அதிலேயே பயணிப்பவன் வாழ்க்கை தவறும், கெடும் என்கிறார் நம் பேராசான்.
“இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.” --- குறள் 856; அதிகாரம் – இகல்
இகல்வது/மாறுபடுவதுதான் பயனளிக்கும் என்பவனுடைய வாழ்க்கை, கொஞ்சம் கெடுமாம், பிறகு முற்றும் கெடுமாம் அதுவும் எப்படி என்றால் இது எல்லாம் சீக்கிரமாகவே நடக்குமாம்.
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை = இகல்வது இனிது என்பவனுடைய வாழ்க்கை; நணி = விரைவில்; தவலும் கெடலும் நணித்து = விரைவில் தவறும், கெடும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments