இகழ்ந்துஎள்ளாது ... 1057, 1058
10/02/2022 (350)
கரப்பு ஒரு நோய். அஃதாவது மறைத்து வைத்தல் ஒரு நோய் என்று சொன்ன நம் பேராசான், முன் சொன்ன கருத்தையே மீண்டும் வலியுறுத்துகிறார்.
அதனாலே, இது முக்கியம் என்று தெரிகிறது. என்னது அது?
திட்டாமல், தாழ்த்திப் பேசாமல் கொடுப்பது. அதுதான் ரொம்ப முக்கியம். கொட்டிட்டு, தேளைப் போல கொட்டிட்டு, கொடுத்தால் அதற்கு பயன் இருக்காது. மனதில் இருப்பதுதான் வார்த்தையாக வருகிறது.
மாற்றாக, அன்போடவும், அருளோடவும் கொடுப்பவர்களைக் கண்டால் இரப்பவர்களுக்கு உள்ளம் மகிழுமாம், உள்ளுக்குள் ஒரு உவகை ஏற்படுமாம்.
இது இரண்டு பக்கமும் ஏற்படும். சரி, நாம குறளுக்கு போவோம்.
“இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.” --- குறள் 1057; அதிகாரம் – இரவு
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் = அவமதித்து, இழிவு செய்யாது கொடுப்பவர்களைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது = உள்ளம் மகிழும், உவகையும் அடையுமாம்.
இந்த ஐந்து குறள்கள் மூலம் இரக்கத்தவர்களின் இயல்பு எப்படி இருக்கனும் என்று சொல்லிச் சென்றார்.
ஒரு தத்துவம் சொல்கிறார், அடுத்த இரு குறள்களில். என்ன தத்துவம்?
இரப்பவர்கள் இல்லையென்றால் இந்த உலகத்தில் உள்ள மற்றவர்கள் மரபொம்மையைப் போலத்தான் இங்கேயும் அங்கேயும் சென்று வந்து கொண்டிருப்பர்களாம். Zombieகள் போல.
Zonmbie க்கு தமிழ்ச் சொல் என்னவென்றால் ‘சோம்பை’யாம். அதாவது: பிணன், மந்தன், முட்டாள் இப்படியெல்லாம் சொற்களைப் போடுகிறார்கள். அப்போ, zombie என்ற வார்த்தை தமிழில் இருந்துதான் சென்றுள்ளதா?
சரி, நாம நேரத்தை செலவு செய்யாமல் அடுத்தக் குறளையும் பார்த்துடலாம்.
“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தற்று.” --- குறள் 1058; அதிகாரம் – இரவு
ஈர்ங்கண் = ஈரமுள்ள இடம், செழிப்பான இடம், தண்ணிரால் சூழப்பட்டு குளிர்ச்சியான இடம்; மா = பெரிய்ய்ய; ஞாலம் = உலகம்; மரப்பாவை சென்று வந்தற்று = மரப் பொம்மைகள் நடமாட்டம் போலத்தான் இருக்குமாம், எந்த உணர்ச்சிகளும் இல்லாமல்.
அதற்கு இல்லாமலே இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
