top of page
Search

இதனை இதனால் ... 517

08/12/2022 (644)

தெரிந்து செயல்வகை (47 ஆவது அதிகாரம்), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடனறிதல் (50), தெரிந்து தெளிதல் (51), இதனைத் தொடர்ந்து தெரிந்து வினையாடல் (52) எனும் அதிகாரம் வைக்கிறார்.


தெரிந்து செயல் வகை எனும் அதிகாரத்தில் ஒருவர் எப்படி ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று சொன்னார்; அதைத் தொடர்ந்து அந்தச் செயல்களுக்கு ஏதுவான வலி, காலம், இடம் முதலியவற்றின் முக்கியத்துவத்தைச் சொன்னார்.


அதன்பின், நம் செயலுக்கு ஏற்றவர்களை எப்படி தெரிந்து, அதாவது, ஆராய்ந்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கினார்.


சேர்த்துக் கொண்டபின் அவர்களின் திறமையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து வினையாடலில் எடுத்து வைக்கிறார்.


அதிகார முறைமை இதனால் விளங்கும். ‘தெரிந்து’ என்றாலே ‘ஆராய்ந்து’ என்பது பொருள்!


தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் உள்ள ஒரு குறளை வெற்றியாளர்கள் பலரும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல்.” --- குறள் 517; அதிகாரம் – தெரிந்து வினையாடல்


இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து = இந்தச் செயலை, இந்தக் கருவிகாளால், இவன் செய்ய வல்லான் என்பதை ஆராய்ந்து;

அதனை அவன் கண் விடல் = அந்தச் செயலை அவனிடம் விட்டுவிட வேண்டும்.


இவர்களைத்தான் “Domain experts” அதாவது “கள நிபுணர்கள்” என்கிறார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த வேண்டும். இது, மிகமுக்கியமாக ஒவ்வொரு தலைமைக்கும் தேவை.


“சிற்பிகள் அம்மி கொத்துவதில்லை” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.


கவிக்கோ ஏன் சொன்னார் என்றால், இந்த archetype (மந்தை அல்லது கூட்டு மூளை) சமுதாயம், சிற்பிகளை வீழ்த்தி அம்மி கொத்தவைக்கத் துடிக்கும்.


அய்ன் ராண்ட் (Ayn Rand 1905 -1982) என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய Fountain Head மற்றும் Atlas Shrugged என்ற இரண்டு நாவல்கள் பலரைப் புரட்டிப் போட்டுள்ளது. அவர் படைத்த Howard Roark, John Galt, Fransico d’anconia ... போன்ற பாத்திரங்கள் ‘சிற்பிகள்’. அவர்களை அம்மி கொத்த வைக்க இந்த சமுதாயம் படாத பாடுபடும். நீண்ட நாவல்கள்தான் இவை. ஆனால், “பொன்னியின் செல்வனை”விட ஒன்றும் பெரிய நாவல் இல்லை.

சிறியதுதான்! நேரமிருப்பின் வாசிக்கவும்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






1 Comment


Unknown member
Dec 08, 2022

Great management concepts.

Like
Post: Blog2_Post
bottom of page