31/07/2023 (879)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அடைமொழி கொடுத்து அடையாளம் காட்டுவதில் ஆசான் வல்லவர். நம் வள்ளுவப் பெருந்தகை மகளிர் என்ற சொல்லை ஐந்து இடங்களில் பயன்படுத்தியுள்ளார். மகளிருக்குச் சில இடங்களில் அடைமொழிகளை இட்டுச் சொல்கிறார். (இது மகன்களுக்கும் பொருந்தும். மகன் என்று சொல்லி “வைத்துச் செய்த” இடங்கள் பல உண்டு!).
ஒருமை மகளிர் (குறள் 974, காண்க 20/08/2022 (539), பண்பு இல் மகளிர் (குறள் 912, காண்க 10/06/2022 (469), மாய மகளிர் (குறள் 918, காண்க 16/06/2022 (475) என்று சொல்லிக் கொண்டுவரும் நம் பேராசான் ஏனைய இரண்டு இடங்களில் மகளிர் என்கிறார். அதில் ஒன்றுதான் கீழே காணும் குறள்.
“இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.” ---குறள் 822; அதிகாரம் – கூடா நட்பு
இந்தக் குறளின் கருத்தானது, நம்முடன் நட்புடன் ஒத்து இருப்பதுபோல இருக்கும் ஒவ்வாமல் இருப்பவர்கள் தங்கள் மனம் போன போக்கில் மாறுபடுவார்கள்.
“இனம் போன்று இனமல்லார் கேண்மை மனம் போல மாறுபடும்” என்றாலே கருத்து புரிந்து விடுகிறது. ஆனால், நம் பேராசான் மகளிர் என்றச் சொல்லை கேண்மைக்கு அடுத்து போட்டிருக்கிறார். இங்குதான் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
நம்மாளு: இதில் சிந்திக்க என்ன இருக்கிறது? இனமல்லார் நட்பானது மகளிர் மனம் போல மாறும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே?
இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
மகளிர் மனம், ஆடவர் மனம் என்று மனத்தில் பிரிவுகள் இருக்கின்றனவா? மனம் என்பதே அலை பாய்வதுதானே?
அது மட்டுமல்லாமல், எந்த ஒரு அடை மொழியும் இல்லாமல் மகளிர் என்றால் எல்லா மகளிரையும் குறிப்பதாகாதா?
எல்லா மகளிர்களுக்கும் மனம் மாறிக்கொண்டேயிருக்குமா? இப்படி பொதுபடச் சொல்பவர் நம் பேராசான் அல்லவே! அப்படிச் சொல்ல வேண்டிய இடமும் இதுவல்ல!
மகளிர் என்று குறித்தாலும் இது இரு பாலாருக்கும் பொதுவானச் சொல்லாகாதா?
பல இடங்களில் ஆடவர்களை விளித்துச் சொல்கிறார். சில இடங்களில் பெண்களிடம் சொல்வதைப்போல் சொல்கிறார். இதையெல்லாம் நாம் பொதுப்படத்தானே எடுத்துக் கொள்கிறோம்.
சில அறிஞர் பெருமக்கள், இந்தக் குறளில் உள்ள மகளிர் என்றச் சொல் பொது மகளிர், விலை மகளிர் போன்றவர்களைக் குறிக்கும் என்று சொல்கிறார்கள்.
இதுவும் சரியாக இருக்காது. ஏன் என்றால் விலை மகளிர் தங்கள் சூழ்நிலை காரணமாகவோ அல்லது வேறு பல காரணங்களாலோ அந்த நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.
அவர்களிடம் நட்பு பாராட்டுபவர்களும் அவர்களின் நிலை அறிந்துதான் இருப்பார்கள். அங்கே உடல் தேவைதான் முக்கியமாக இருக்குமே தவிர மன ஒற்றுமையோ அதில் உறுதியோ எதிர்பார்த்தேன் என்று சொல்லக்கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, நம் பேராசான் அவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்.
“...உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!...” என்பார் வடலூர் வள்ளல்பிரான்.
இந்தக் குறளில் சொல்லப்பட்டிருப்பது துணை போன்று அமைந்து கீழறுக்கும் உறவைக் குறிக்கிறார் என்று பொருள் எடுக்கலாம். அப்படி பொருள் எடுத்தால் அது இருபாலாருக்கும் பொதுவாகவும் அமையும்.
முதல் (822 ஆவது) குறளில் “சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை” என்றதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். காண்க 30/07/2023 (878).
பழி வாங்குவதற்கென்றே திருமணம் செய்துகொண்டு துணையை அழிப்பவர்களும் இருக்கத்தானேச் செய்கிறார்கள். எனவே, கூடா நட்பிற்கு ஒரு உச்சபட்ச உவமையைச் சொல்ல வள்ளுவப் பெருந்தகை நினைத்துள்ளார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
“இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.” ---குறள் 822; அதிகாரம் – கூடா நட்பு
இனம்போன்று = வாழ்க்கைத் துணை போன்று வெளித் தோற்றத்திற்கு நடித்து; இனமல்லார் கேண்மை = ஆனால், உண்மையானத் துணையாக இல்லாமல் இருப்பவர்களின் நட்பு; மகளிர் = இணை/துணை; மனம் போல வேறு படும் = மனம்போல வேறு படும்.
வாழ்க்கைத் துணை போன்று வெளித் தோற்றத்திற்கு நடித்து, ஆனால், உண்மையானத் துணையாக இல்லாமல் இருப்பவர்களின் நட்பு, அந்தத் துணையின் மனம் போல வேறு படும்.
இப்படிப் பொருள் எடுத்தல் நம் பேராசானின் சொல்லாட்சிக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது எனது கருத்து. இது இருபாலாருக்கும் பொதுவாகவும் அமைகிறது.
எனது ஆசிரியர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் இந்தக் குறள் என்னை பல கோணங்களில் பல நாட்கள் சிந்திக்க வைத்தது என்றால் அது மிகையல்ல.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments