top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

இன்சொலால் ஈரம் ... 91, 90, 95

17/09/2023 (925)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

விருந்தோம்பல் அதிகாரத்தின் முடிவுரையாக அமைந்த குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 15/09/2022 (564).


மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.” --- குறள் 90; அதிகாரம் – விருந்தோம்பல்


அனிச்சப் பூ முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் தன்மைத்து. அது போல, நம்மை நாடி வரும் விருந்தினர்களும், நம் முகத்தில் சிறிது மாறுபாடு தோன்றுமானால் வாடி விடுவார்கள்.


முகம் திரிந்துப் பார்த்தாலே வாடிவிடுபவர்கள் கடுமையான சொல்லைக் கேட்டால்? கொடுமைதான்!


எனவே விருந்தோம்பலுக்கு இன்றியமையாதது இனியவை கூறல் என்ற வகையில் இனியவை கூறலை அடுத்த அதிகாரமாக வைத்துள்ளார்.


நம் பேராசான், இந்த அதிகாரத்தில் சொன்ன ஒரு குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 02/08/2022 (522).

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.” --- குறள் 95; அதிகாரம் – இனியவைகூறல்


எங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் பணிவுடனும் மேலும், எல்லாரிடத்திலும் இன்சொல் பேசுவதும் ஒருவற்கு அழகு.

திருமூலப் பெருமான் “... யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” என்றார்.

இன்னுரைதான் நம் உரையாக இருத்தல் வேண்டும்.

இன்சொல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற வரையரையை (definition) முதல் குறளிலேயே தெரிவிக்கிறார். இதற்கு மூன்று உறுப்புகளைப் பட்டியலிடுகிறார்.


முதலில், இன்சொல்லில் ஈரம் இருக்க வேண்டும்;

இரண்டாவது, அந்த இன்சொல்லில் “வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271) இருக்கக் கூடாது. அஃதாவது, வஞ்சக எண்ணம் ஒளிந்திருக்கக் கூடாது;

மூன்றாவது, இன்சொல்லில் உண்மைப் பொருள்தான் இருக்க வேண்டும்.

இவை மூன்றும்தாம் இன்சொல்லுக்கு அடிப்படை என்கிறார்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.” --- குறள் 91; அதிகாரம் – இனியவை கூறல்

இன்சொல் = இன்சொல்லாவன; ஆல் = அசை நிலை – பொருள் இல்லை; ஈரம் அளைஇ = அன்பு கலந்து; படிறு இலவாம் = வஞ்சனையான எண்ணம் இல்லாமலும்; செம்பொருள் கண்டார் = உண்மைப் பொருள் கண்டார்; வாய்ச் சொல் = சொல்லும் சொல்கள்தாம்.

இன்சொல்லாவன: அன்பு கலந்து, நெஞ்சில் வஞ்சனையான எண்ணம் ஏதும் இல்லாமலும், உண்மைப் பொருளை உணர்த்தும் வகையிலும் சொல்லும் சொல்கள்தாம்.


இன்சொல் பழகுவோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






Comentarios


Post: Blog2_Post
bottom of page