12/03/2021 (54)
நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
கோழி ஒன்னு தன் குஞ்சுகளோட ஒரு மைதானத்தில இரை தேடிட்டு இருந்தது. அப்போன்னு பார்த்து ஒரு பருந்து அந்த குஞ்சுகள்ல ஒன்னை தூக்கிட்டு போக வேகமா கீழே வந்தது. எப்படித்தான் அந்த பருந்து வருவது தெரிந்ததோ அந்த கோழிக்கு! உடனே பாய்ந்து சண்டை போட்டு அந்த பருந்தை விரட்டுது தன் பலம் கொண்ட மட்டும். அந்த பருந்து மிரண்டு போய் பறந்து போயிடுது.
இந்த காட்சியை நாம எல்லாரும் பார்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
என்னடா குறளுக்கு பதில் இன்றைக்கு கதையான்னு நினைப்பது தெரியுது. சும்மா குறளையே பார்த்துட்டு இருந்தா களைப்பாயிடுதில்ல. அதான் ஒரு சின்னக் கதை.
குஞ்சுகளுக்கு இரை தேவைங்கறதாலே அன்போட அது தன் குஞ்சுகளை அழைச்சுட்டு வெளிய போச்சு. ஆனா, அங்கே வீரமா ஒரு சண்டை பருந்தோட; போர் மறவர் மாதிரி! மறம்னா வீரம். நிற்க.
ஒருத்தர் ரொம்பவே நம்மளை வைச்சு செய்யறாரு. நாம வள்ளுவப்பெருந்தகையோட ஆளுங்க இல்லையா! நமக்கு ஒரு குறள் கவனம் வந்துடுது.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.”- குறள் 314; அதிகாரம் – இன்னாசெய்யாமை
நாம ரொம்பவே பொறுத்து போயிடறோம். அவருக்கு அவர் தப்பு தெரிஞ்சுடுது. மன்னிப்பு கேட்டு வருந்தறாரு. நடக்குதா இல்லையா? இப்படியும் நடக்குது! அவர் நம்மை ‘வைச்சு செய்யறது அறமா’? இல்லை மறம். அதாங்க அறத்துக்கு எதிர்ச்சொல் மறம். இந்த மறம் மாறுவதற்கு காரணமும் நம்மளோட அன்புதான். இப்போ வந்துட்டேன் குறளுக்கு. இந்த மாதிரி நிகழ்வுகள் இருக்குன்னு சொல்ல வள்ளுவப்பெருமான் ஒரு குறளை சொல்றாரு. இதோ அந்த குறள்:
“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.” ---குறள் 76; அதிகாரம் – அன்புடைமை
பொருள்: தெரியாதவங்க தான் சொல்வாங்க அறத்துக்குத் தான் அன்பு வேணும்ன்னு, ஆனால் மறத்துக்கும் அந்த அன்பே தான் துணை.
மறத்துக்குப் பொருள் வீரம்ன்னு எடுத்துக்கலாம்; அறமற்ற செயல்ன்னும் எடுத்துக்கலாம்.
எப்படி நம்ம பேராசான்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários