19/04/2022 (417)
இன்பம் என்றால் என்ன? இப்படி ஒரு கேள்வி கேட்டா, நமக்கு என்ன பிடிக்குமோ அதைச் சொல்வோம். என்னைக் கேட்டா, வெங்காய பஜ்ஜியில் ஆரம்பித்து பட்டியல் நீண்டு கொண்டே போகும்!
நம் பேராசானைக் கேட்டால் “அறத்தான் வருவதே இன்பம்” என்பார். காண்க 24/02/2021 (38).
மகாகவி பாரதியைக் கேட்டால் அவர் உலகமே வேற! கோடி கோடி இன்பம் இவ்உலகில் என்பார்.
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய் அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப் பல பல நல்லழகுகள் சமைத்தாய்
முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய் பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள் பரமா பரமா பரமா” என்று உருகுவார் மகாகவி தன் நிலை மறந்து!
அறத்தால் வருவது இன்பம் என்ற பேராசான், அந்த இன்பத்துள் இன்பம் எது என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார் ‘இகல்’ அதிகாரத்தில்.
எது இன்பம் பயக்குமாம் என்றால் துன்பத்துள் துன்பம் கொடுக்கும் இகல் (மாறுபாடு) இல்லா உறவுகள் இன்பத்துள் இன்பம் பயக்குமாம்.
“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.” --- குறள் 854; அதிகாரம் - இகல்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
תגובות