இன்மை எனஒரு பாவி ... 1042, 1041
25/01/2022 (334)
இலம் என்று சும்மா உட்கார்ந்தா என்ன ஆகும்? ஒன்றும் இருக்காது. ஒன்றும் இருக்காதா? தப்பு, வறுமை இருக்கும்!
அதனாலே, அடுத்த அதிகாரமாக ‘நல்குரவு’ என்ற அதிகாரம் வைக்கிறார். அதைத் தொடர்ந்து இரவு, இரவச்சம், கயமை ஆகிய மூன்று அதிகாரங்காள். அத்துடன் பொருட்பாலை முடிக்கிறார்.
‘நல்குரவு’ என்றால் நுகரப்படும் பொருட்கள் ஒன்றும் இல்லாமல் இருப்பது என்கிறார் பரிமேலழகப் பெருமான். நல்கூர்ந்தார் என்றால் வறியவர்கள், இல்லாதவர்கள். வறுமையை நீக்க பல வழிகளை ஏற்கனவே காட்டிய நம் பேராசானுக்கு ஒரு ஐயம். என்ன சொல்லியும் சும்மாவே நம்மாளு உட்கார்ந்துட்டா?
அதனால், சோம்பி சும்மாவே இருந்தா வரும் நிலைகளை படம் பிடித்துக் காட்டுகிறார். அது எதுவரை போகும் என்பதற்காக தொடர்ந்து வரும் அதிகாரங்களும்.
“தம்பி நல்லா படிச்சா பெரிய ஆளாகலாம். இல்லை என்றால் _______ தான் மேய்க்கனும்” என்பது போல.
நல்குரவின் முதல் குறளை (காண்க குறள் 1041) நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மீள்ப்பர்வைக்காக:
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது.” --- குறள் 1041; அதிகாரம் – நல்குரவு
‘இல்லாத கொடுமை’ க்கு உவமை இல்லாத கொடுமையேதான். வேற தேடிப்பார்த்தேன். சரியா வரலைன்னு நம் பேராசான் சொன்னதைப் பார்த்தோம்.
வறுமையை வளரவிட்டால் என்ன ஆகும்? வாழும் காலத்திலேயும் துன்பம். சுற்றம் எள்ளி நகையாடும். உலகத்தைவிட்டுப் போனாலும் விடாது; தூற்றும். இம்மை பயனும் கிடையாது, மறுமைப்பயனும் கிடையாது.
“இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.” --- குறள் 1042; அதிகாரம் – நல்குரவு
இன்மை எனஒரு பாவி = இல்லாமை எனும் ஒரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் = அவன் மறைந்து விட்டாலும், வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு சுகமும் கொடுக்காது. விடாமல் துரத்தும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
