இன்றும் வருவது ... குறள் 1048
Updated: Jan 31, 2022
31/01/2022 (340)
வறுமையின் கொடுமைகளை நம்பேராசான் படம் பிடித்துக் காட்டிக் கொண்டே வருகிறார். வறுமையினால் பல கொடுமைகள் வந்து பிடித்துக் கொள்கிறது. கண் மயங்கிவிடுகிறான். அந்தச் சமயம்தான் அவன் சற்று மறந்திருக்கும் சமயம். கண் விழிக்கிறான். விழிக்கும் போதே, அச்சம் அவனை ஆட்கொள்கிறது.
உணர்ச்சிகளின் உச்சத்திலிருந்து எழுதியிருக்கிறார்.
“இன்றும் வருவதுகொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.” --- குறள் 1048; அதிகாரம் – நல்குரவு
நெருநல் = நேற்று; நிரப்பு = வறுமை, பசி, பிணி; நெருநலும் கொன்றது போலும் நிரப்பு = இந்த துண்பம் நேற்றும் வந்து என்னைக் கொன்றது; இன்றும் வருவதுகொல்லோ = இன்றைக்கும் வந்து என்னைக் கொல்லுமே. (ஐயோ, நான் என்ன செய்வேன்?)
படிக்கும் போதே பதறுகிறது. அதற்குதான் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறார்கள். யாராவது கை ஏந்தினால், இருந்தால் (கையிலும், மனதிலும்) உடனே கொடுங்கள்.
ஏன் உழைத்து பிழைக்கக் கூடாது? கை, கால் நன்றாகத் தானே இருக்கிறது. என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் எழும். அந்த எண்ண அலைகள் நம் மனதிற்குள் ஓய்வதற்குள் அவன் போய்விட்டு இருப்பான். அவன் பிச்சை எடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவன் ஏமாற்றுக்காரனாகக்கூட இருக்கலாம். பரவாயில்லை கொடுங்கள். அவனை ஆராய்வது நம் வேலை இல்லை.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. அதேபோல்தான் இதுவும்.
கிறுஸ்துவ புணிதநூலில் ஒரு வசனம். “For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you”.
“நீங்கள் மற்றவர்களை எப்படி அளக்கிறீர்களோ, அப்படியே நீங்களும் அளக்கப்படுவீர்கள், நீங்கள் பயன்படுத்தும் அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” மிகவும் ஆழமான சொல்லாடல்.
கொடுக்க மனம் வரவில்லையா, ஒதுங்கிவிடுங்கள். அது எவ்வளவோ மேல். அதைவிட முக்கியம், கொடுப்பவர்களை எந்தக் காரணம் கொண்டும் தடுத்து விடாதீர்கள்.
மேற்கண்ட கருத்துகள், என் ஆசிரியர் எனக்கு திருப்பி, திருப்பிச் சொன்னது. இது நிற்க.
அந்தக் காலத்தில், நெருநல், நென்னல் என்ற சொற்களை ‘நேற்று’ என்பதற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
