இமையாரின் வாழினும் ... குறள் 906
02/06/2022 (461)
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.” பாடல் – 53; நீதிநெறி விளக்கம் – குமரகுருபர சுவாமிகள்
(செவ்வி = காலம், நேரம்)
நமக்கெல்லாம் தெரிந்தப் பாடல் தான் இது. அதாவது, செய்யும் செயலில் முழு கவனம் செலுத்தி செய்பவர்கள் வேறு எதையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்.
இதிலே, நாம் கவனிக்க வேண்டிய ஒரு சொல் – “கண்துஞ்சார்”. அதாவது கண் இமைக்க மாட்டார்கள் என்பது. அவர்களின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும் என்பது. இது ஒரு உயர்ந்த நிலையில்லையா? அவர்களின் உயர்வை யாராலும் தடுக்க இயலாது என்பது அனைவரும் அறிந்ததே.
நம் வள்ளுவப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால் அவ்வாறு, ஒருவன் இமைக்காமல் இருந்து பணியாற்றுபவர்களையும்விட சிறப்பாக செய்து, அதனால் பெரு வெற்றிகளை அவன் பெற்றாலுமே அதை மேற்கோளாக எடுத்து யாரும் பேச மாட்டார்களாம்!
ஆச்சரியாமாக இருக்கு இல்லையா? எப்போது அந்த மாதிரி நிகழும்? என்று எடுத்து வைக்கிறார் நம் பேராசான்.
போர் களத்தில் பல வீரர்களின் தோள்களை வென்றிருக்கலாம், ஆனால், இல்லாளின் அழகான மென் தோள்களை வெல்ல அஞ்சுபவன் புகழை யாரும் எடுத்து இயம்பமாட்டார்களாம்.
“இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.” --- குறள் 906; அதிகாரம் - பெண்வழிச்சேறல்
இமையாரின் வாழினும் பாடிலரே = கண்துஞ்சாமல் கருத்தாக இருந்து பல வெற்றிகளைப் பெற்றவர்களைவிட, கருத்து ஊன்றி தான் வெற்றி பெற்றாலும் யாரும் பாராட்டமாட்டார்கள்;
அமை = வேய் = மூங்கிலைப் போன்ற அழகு, மெல்லிய அழகு என்ற சொல்லுக்கு ஆகி வந்துள்ளது; ஆர் = போன்ற; அமை ஆர் தோள் இல்லாள் அஞ்சு பவர் = மெல்லிய அழகான தோள்களைப் பெற்ற இல்லாளிடம் அஞ்சுபவர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
