இரத்தலும் ஈதலே போலும் ... குறள் 1054
07/02/2022 (347)
கர்ணன் திரைபடத்தில் சிறப்பான ஒரு பாடல். (ஒரு பாடல் என்ன? அனைத்துப் பாடல்களுமே சிறப்பு. அப்பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே.ராமமூர்த்தி ஆகிய இருவரின் இசை அமைப்பும் அபாரம்)
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் .. என்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலில்:
“…மன்னவர் பொருள்களை கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார், மாமன்னன் கர்ணனோ
தன் கரம் நீட்டுவார், மற்றவர் எடுத்துக் கொள்வார்
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்தவன் கர்ணவீரன்
வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே, வாழ்க, வாழ்க..”
வறுமைக்கே வறுமையை வைத்தாராம் கர்ணன். இந்த மாதிரி, இந்தக் காலத்திலும் இருப்பார்களா? என்றால் இருக்கிறார்கள். எனது சின்ன சின்னஞ்சிறு வாழ்கையில் சந்தித்துள்ளேன். அவர்களின் பொற்பாதங்களுக்கு என் வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டு தொடருகிறேன்.
பெறுவதுகூட நாம் ஒருவருக்கு கொடுத்தது போல ஒரு நிறைவை உண்டாக்குமாம். எப்படி?
உயர்ந்தவர்கள் கொடுக்கும் போது, அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படையாக வெளிக்காட்டுவார்கள். பெறுபவர்களை, அவர்களின் பழம் பெருமைக்கு ஒரு சிறுமையும் வராமல், உயர்த்தி நடத்துவார்கள். அவ்வாறு நடத்தும் போது, பெறுபவர்களுக்குத் தானும் ஏதோ ஒன்று கொடுத்தது போல உணரவைப்பார்கள் நல்லோர்கள்.
படம் பிடித்துக் காட்டுகிறார் நம் பேராசான்.
“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.” --- குறள் 1054; அதிகாரம் – இரவு
கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு = ஒளித்து வைத்தல், ஏமாற்றுதல் ஆகியனவற்றைக் கணவிலும் நினையாதவர்களிடம்; இரத்தலும் ஈதலே போலும் = (ஒருவர்) இரப்பதும், (அவர்) ஏதோ ஒன்றைக் கொடுத்ததைப் போல ஒரு உணர்வைக் கொடுக்குமாம்.
குறள்கள் எல்லாம், நம் பேராசான், உணர்வு நிலையில் இருந்து எழுதப்பட்டவை. குறள்களை மனனம் செய்வதைவிட, அந்த உணர்வுகளை உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று என் ஆசிரியர் எப்போதும் வலியுறுத்துவார். மனனம் செய்வது ஒரு வித்தை. மனதுக்குள் வாங்குவது விதை. விதைப்போம் தொடர்ந்து.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
