top of page
Search

இரவார் இரப்பார் ... குறள் 1035

19/01/2022 (328)

நேற்றைய கேள்விக்கு பல பதில்கள் பின்னூட்டமாகவும், குறுஞ்செய்திகளாகவும் வந்திருக்கு.


என்ன புரிதல் என்றால் அந்த காலத்திலே (once upon a time), எல்லாருமே ஒருத்தருக்கு பசி என்றால் தன்னிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளத் தயங்கியதில்லை. அதற்கு பிரதி உபகாரமாய் பெறுவதை இழுக்கு என்றே கருதினர் என்றே நண்பர்கள் பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர். போட்டி மனப்பான்மை இல்லாதிருந்தக் காலம். தொழில் என்றால் பெரும்பாலும் விவசாயமாக இருந்த காலம் அது.


வள்ளுவப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால் உழவுப் பெருமக்களை தம் கையால் உழுது உண்பதை இயல்பாகக் கொண்டவர்கள் என்கிறார். அத்தகைய இயல்புடையவர்கள் மற்றவர்களிடம் கையேந்துவார்களா? நிச்சயம் இருக்காது.மற்றவர்களுக்கு தேவை எனில் தவறாது கொடுப்பர் அதுதான் அவர்களின் பண்பு என்று வரையறுக்கிறார்.


இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர். “ – குறள் 1035; அதிகாரம் – உழவு


கை செய்து ஊண் = தம் கைகளால் உழுதலைச் செய்து உண்ணும்; மாலையவர் = இயல்பினை உடையவர்; இரவார் = பிறரிடம் யாசிக்க மாட்டார்; கரவாது = தவறாது; இரப்பார்க்கு ஒன்று ஈவர் = இரப்பவர்களுக்கு தம்மிடம் உள்ள பொருளை தருவர்.


அந்த மாதிரி இருந்த உழவர்கள் இப்போது மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டால், நாம நேற்று பார்த்தக் குறளை மீண்டும் பார்ப்போம்:


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான்.” --- குறள் 1062; அதிகாரம் – இரவச்சம்


இந்த உலகம் இருந்தால்தான் என்ன? அதனைப் படைத்தவன் அழிந்தால்தான் என்ன? ன்னு கேள்வி யாராக இருந்தாலும் வருமா இல்லையா?


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி. யார் அந்த தனி ஒரு மனிதன்? தின்ணையில் தூங்கி காலம் கழிப்பவனா? உணர்த்துகிறார் தன் வரிகளாலே:


“உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை;

பிணிகள் பல உண்டு; பொய்யைத்

தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்கள்

உண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்

எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு;

தூக்குண்டே இறப்பது உண்டு...”


நிலைமை மாறவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை, இல்லை இதுதான் இயற்கையோ? Survival of the fittest (தக்கன பிழைத்து வாழ்தல்) என்றாரே டார்வின் பெருமகனார் அதுதான் உண்மையோ?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




12 views0 comments
Post: Blog2_Post
bottom of page