08/06/2024 (1190)
அன்பிற்கினியவர்களுக்கு:
நம் பேராசான் கல் நெஞ்சக்காரர்களைக் கண்டுநொந்து போகிறார். இந்த இரவு அச்சம் என்னும் அதிகாரம் அவரின் அச்சமாகவே வெளிப்படுகிறது. தன் உள்ளத்தை முற்றிலும் வெளிப்படுத்துகிறார். அடுத்துவரும் பாடலும் அவ்வாறே.
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். – 1069; - இரவு அச்சம்
இரவு உள்ள உள்ளம் உருகும் = பிச்சை எடுத்து வாழும் நிலையில் பலர் இருக்கிறார்களே என்று எண்ணும் பொழுது உள்ளம் உருகுகிறது; கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் = அவர்களுக்கு உதவ மனமில்லாமல் சிலர் தாம் மட்டுமே செழித்துக் கொண்டிருக்கிறார்களே என்று எண்ணும்பொழுது உள்ளம் மட்டுமல்ல உடலும் நிலை குலைந்து கெடுகிறது.
பிச்சை எடுத்து வாழும் நிலையில் பலர் இருக்கிறார்களே என்று எண்ணும் பொழுது உள்ளம் உருகுகிறது; அவர்களுக்கு உதவ மனமில்லாமல் சிலர் தாம் மட்டுமே செழித்துக் கொண்டிருக்கிறார்களே என்று எண்ணும்பொழுது உள்ளம் மட்டுமல்ல உடலும் நிலை குலைந்து கெடுகிறது.
அடுத்து முடிவுரையாகச் சொல்ல வேண்டும். ஒரே போடாகப் போடுகிறார்.
கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். – 1070; - இரவு அச்சம்
இரப்பவர் சொல்லாட உயிர் போஒம் = இரப்பவர் இரக்கும்பொழுதே அவர் உயிர் போய் விடுகின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ = ஆனால் கரப்பவர்களுக்கு உயிர் என்ற ஒன்று இருக்கிறதா? இருந்தால் அது எங்கு ஒளிந்திருக்கும் என்று தெரியவில்லையே.
இரப்பவர் இரக்கும்பொழுதே அவர் உயிர் போய் விடுகின்றது. ஆனால், கரப்பவர்களுக்கு உயிர் என்ற ஒன்று இருக்கிறதா? இருந்தால் அது எங்கு ஒளிந்திருக்கும் என்று தெரியவில்லையே.
அஃதாவது, அவர்களுக்கு உயிரோட்டம் என்பது ஒரு கேடா என்று வினவுகிறார்.
இந்த அதிகாரத்தைத் தொடர்ந்து கயமை என்னும் அதிகாரம். இரவு அச்சத்தில் சாட்டையை எடுத்த நம் பேராசான் சுழன்றுச் சுழன்றுத் தாக்குகிறார் கயமையில்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments