09/09/2021 (198)
குறிப்பறிதல் (111) அதிகாரத்திலே உள்ள பத்து குறள்களிலும் வரும் சொல் ‘நோக்கு’. அதாவது, ‘லுக்விடறது’ ன்னு தமிழிலே சொல்றாங்களேஅதுதான்.
மாய்ந்து, மாய்ந்து எழுதியிருக்கிறார் நம் பேராசான். முதல் குறளிலேயே (1091) பின்னுகிறார்.
அண்ணன்: தம்பி, அவள் பார்வை இருக்கே அது என் மேல பட்டாலே நான் நொந்து போயிடறேன்.
தம்பி: அப்போ, விடுங்க அண்ணே அதை.
அண்ணன்: அது எப்படி தம்பி, அவளோட அடுத்தப் பார்வை இருக்கே, அதுதான் எனக்கு மருந்து. அதுக்காக, பார்த்துகிட்டு இருக்கேன்.
தம்பி ‘ங்கே’ன்னு விழித்தான். சரி இதுதான் ஆரம்பம். ம்ம்… இன்னும் போகப் போகப் பார்க்கலாம்ன்னு கிளம்பிட்டான் தம்பி.
“இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து.” ---குறள் 1091; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
உண்கண் = மையுண்ட கண், எடுப்பான கண்
இந்தக் குறளை, ஜெர்மானிய அறிஞர் கிரௌலுக்கு (Dr. Graul) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னாங்களாம். அதிலே, அவர் அப்படியே கிறங்கிப் போயிட்டாராம். அதானலே, அவர் என்ன செய்தார் என்றால், தமிழைக் கற்றுக்கொண்டு, திருக்குறளை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்தாராம்! எப்போது என்கிறீர்களா? 1854ல் ஜெர்மானிய மொழியிலும், 1856ல் லத்தீனிய மொழியிலும் மொழிபெயர்த்தாராம்! (Page 19, Makers of Indian Literature - Thiruvalluvar by Justice S. Maharajan, Published by Sahitya Akademi in the year 2017). கிரௌலின் நோக்கே தனிதான்! நமக்குதான் நோக்கமே இல்லாம இருக்கு. இது நிற்க.
அப்படியே, அண்ணனின் ஏக்கப்பார்வை தொடர்கிறது. கொஞ்சம் முன்னேற்றம். அண்ணன் பார்க்காதபோது, திருட்டுத்தனமாக சில நொடிகள் கள்ளப்பார்வையை, அவள் செலுத்துகிறாள். அண்ணனுக்கு தாங்க முடியலை. கற்பனை குதிரையை தட்டிவிட்டு, காதலின் எல்லையை நோக்கிய பயணத்திலே பாதிக்கு மேலே கடந்தது போல கற்பனையில் இருக்காராம் நம் அண்ணன்.
“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது.” --- குறள் 1092; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் = திருட்டுத்தனமாக சில நொடிகள் அவள் பார்க்கும் பார்வை; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது = அடையப் போகும் இன்பத்தில் பாதிக்கு மேல இப்பவே கிடைத்தால் போல இருக்கு; செம்பாகம் = பெரிய பகுதி
இருக்காதா பின்னே? நம் பேராசான் தொடர்கிறார் மேலும்.
நாளை சந்திப்போம். நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.
Comments